Published:Updated:

காதல் தோல்வி; விரக்தி; துப்பாக்கிச்சூடு! - டெல்லியில் தேர்தலுக்குமுன் கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ

ப்ரீத்தி - தீபன்ஷூ
ப்ரீத்தி - தீபன்ஷூ

டெல்லியில் இன்று தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் நேற்று இரவு ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லி முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடக்கும் வாக்குப்பதிவின் முடிவுகள் வரும் 11-ம் தேதி எண்ணப்படவுள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தேர்தலையொட்டி நேற்று முன்தினம் முதல் மொத்த டெல்லியும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே பேரிகாட்டுகள் போட்டு சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

ப்ரீத்தி
ப்ரீத்தி

இவ்வளவு பரபரப்பான டெல்லி தேர்தலுக்கு மத்தியில் நேற்று இரவு ஒரு பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் டெல்லி மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணி செய்து வந்துள்ளார் ப்ரீத்தி அஹல்வாட். 29 வயதான இவர் ரோகினி பகுதியில் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு தன் பணியை முடித்துக்கொண்டு மெட்ரோ ரயிலில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சரியாக இரவு 9.30 மணிக்கு ரோகினி மெட்ரோ நிலையத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபரால் ப்ரீத்தி துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து ப்ரீத்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கொலை
கொலை

இது தொடர்பான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே ஹரியானாவின் சோனிபேட் பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ஷூ ராதி தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வந்துள்ளது. இவர் ஹரியானாவில் வேலை செய்தாலும் ரோகினி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஒரே இரவில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்த விஷயம் டெல்லி காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு உயிரிழப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

ப்ரீத்தியும் தீபன்ஷூவும் 2018-ம் ஆண்டு பேட்ச் மெட்டுகளாக இருந்துள்ளனர். அப்போதிலிருந்து இருவரும் நண்பர்களாகப் பழகியும் வந்துள்ளனர். பிறகு, இருவருக்கும் போஸ்டிங் கிடைக்கவே தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றுள்ளனர். பயிற்சியில் இருக்கும்போதே தீபன்ஷூ ப்ரீத்தியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதை ப்ரீதியிடம் கூறியுள்ளார், ஆனால் அவர் தீபன்ஷூவின் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சப் இன்ஸ்பெக்டர் தீபன்ஷூ நிறைய போராடி முடியாமல், நேற்று தனியாக வந்த ப்ரீத்தியை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

தீபன்ஷூ
தீபன்ஷூ
NDTV

ப்ரீத்தியின் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ப்ரீத்தியைக் கொலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்ற தீபன்ஷுவும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். ப்ரீத்தி தன் காதலை ஏற்க மறுத்ததால் விரக்தியிலிருந்த தீபன்ஷூ இப்படிச் செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு