Published:Updated:

`2018-ம் ஆண்டு நீதிபதியிடம் பாராட்டு.. 2020-ம் ஆண்டுச் சிறை..!’ - கோவைப் பெண் போலீஸ் கைது பின்னணி

சுஜா
சுஜா

நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் கோவைப் பெண் காவலர் ஒருவர். இது குறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டதற்குச் சில உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நழுவி வந்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவர் சுவப்ன சுஜா. சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியைக் கவனித்து வந்தார். இந்தநிலையில், கொள்ளையடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லை, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்தது.

சுஜா
சுஜா

இதுகுறித்து காவல்நிலையத்தின் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் கேட்டபோதும் சுஜாவிடமிருந்து உரிய பதில் வரவில்லை. முக்கியமாக 11 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகையை போலீஸார் மீட்டனர். அந்த நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணி சுவப்ன சுஜாவிடம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டதற்கு சில உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நழுவி வந்துள்ளார். இப்படியே சில ஆண்டுகள் கடந்தநிலையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் சுவப்ன சுஜாவிடம் விசாரணை செய்து உரிய விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சுஜா
சுஜா

ஆனால், சுஜா எந்தப் பதிலும் அளிக்காமல் நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தற்போது சுஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சுஜாவுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நகைகளைக் காணவில்லை என்று புகாரளிப்பவர்களிடம் ஒப்படைக்காமல், நகைகளை பெற்றுக்கொண்டதாக கையெழுத்து மட்டும் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார். யாராவது கேட்டால், ‘வழக்கு முடிகிற வரை நகைகள் காவல்நிலையத்தில்தான் இருக்க வேண்டும்’ என்று சொல்லி சமாளித்துள்ளார். அதேநேரத்தில், காவல்நிலையத்திலும் அவர் நகைகளை முழுவதுமாக ஒப்படைக்கவில்லை.

சுஜா நீதிபதியிடம் பாராட்டு பெறும்போது
சுஜா நீதிபதியிடம் பாராட்டு பெறும்போது

இதனால், தனிப்படை அமைத்து அவர் குறித்து விசாரித்து வந்தோம். இப்போது கைதும் செய்யப்பட்டுவிட்டார்” என்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுஜா, 2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த, பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்று, அவ்வழக்குகளை முழுமையாக முடித்துவைத்துள்ளார். இதற்காக, அவரைப் பாராட்டி 2018-ம் ஆண்டு நீதிபதி பரிசு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு