Published:Updated:

இன்ஸ்டாகிராம் பழக்கம், தனிமையில் பேச்சு... பொள்ளாச்சி இளைஞர் கொலையில் நடந்தது என்ன?

கௌதம்
கௌதம்

பொள்ளாச்சி அருகே, தனிமையில் பெண் தோழியிடம் பேசிய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன், கௌதம். பொள்ளாச்சியில் உள்ள ஓர் துணிக்கடையில் பணியாற்றிவருகிறார். இதனிடையே, கடந்த 7-ம் தேதி, தனது 16 வயது பெண் தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கௌதம்
கௌதம்

அப்போது, வெளியே சென்றிருந்த சிறுமியின் தந்தை, மாமா மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரும் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் கௌதமைக் கண்ட அவர்கள், அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு கௌதமை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த கௌதம், சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார், கௌதமைத் தாக்கிய சிறுமியின் தந்தை உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம்
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கௌதம் உயிரிழந்தார். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலைய போலீஸார், சிறுமியின் உறவினர்கள் 3 பேர்மீது பதிவுசெய்திருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த கௌதமுக்கும் சிறுமிக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் எல்லோரும் வெளியில் சென்றுள்ளனர். இதனால் கௌதம், சிறுமியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர், வெளியில் கௌதமின் செருப்பு இருப்பதைக் கண்டு சந்தேகித்துள்ளனர்.

கொலை
கொலை

பிறகு வீட்டில் வந்து தேடியபோது, கௌதம் கட்டிலுக்கு அடியே ஒளிந்துகொண்டிருந்துள்ளார். ஆத்திரமடைந்த மூவரும் கௌதமை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு