Published:Updated:

மர்மம் விலகாத சுபஶ்ரீ மரணம்... சந்தேகம் எழுப்பும் உறவினர்கள் - ஈஷா யோகா மையம் சொல்லும் விளக்கம்!

சுபஶ்ரீ

கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்குச் சென்ற சுபஶ்ரீ மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன.

மர்மம் விலகாத சுபஶ்ரீ மரணம்... சந்தேகம் எழுப்பும் உறவினர்கள் - ஈஷா யோகா மையம் சொல்லும் விளக்கம்!

கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்குச் சென்ற சுபஶ்ரீ மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன.

Published:Updated:
சுபஶ்ரீ

கோவை ஈஷா யோகா மையம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. `சைலன்ட்’ பயிற்சிக்குச் சென்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஶ்ரீ என்ற பெண், கடந்த டிசம்பர் 18-ம் தேதி மாயமானார். கணவர் பழனிக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலாந்துறை போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா மையம்

இதற்கிடையே கடந்த 1-ம் தேதி சுபஶ்ரீயின் உடல், செம்மேடு பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பல்வேறு சந்தேகங்களை சுபஶ்ரீயின் உறவினர்களும், அரசியல் கட்சிகளும் எழுப்பிவருகின்றனர்.

சுபஶ்ரீயின் சகோதரர் வசந்த் செய்தியாளர்களிடம், “ஒரு வகுப்புக்குச் சென்றிருக்கிறோம் என்றால், வெளியே வரும்வரை அவர்கள்தான் பொறுப்பு. அந்த வகுப்பில் கலந்துகொள்பவர்கள் அணியும் டேக்குடன் ஒரு பெண் தனியாக வெளியே வருகிறார். அவர்களை ஊழியர் யாரும் என்ன, ஏதென்று கேட்கவில்லை.

வசந்த்
வசந்த்

அவர்களுக்குத் தேவை பணம். அதற்கு பறிபோவது உயிர். இது கொலையா, தற்கொலையா எனத் தெரியவில்லை. அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

சுபஶ்ரீயின் தாய் கலா கூறுகையில், “அவள் வேலை பார்த்த நிறுவனத்திலுள்ள உயரதிகாரிகள்கூட, சின்ன விஷயம் தெரியவில்லை என்றாலும் அவளிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்வார்கள். நான் பெத்த மகள் கோழை இல்லை. அவள் தைரியமானவள்.

கலா
கலா

எப்படி இறந்தாள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லையே... என்ன செய்தார்களோ தெரியவில்லை. வருபவர்களிடம் அவள் எப்படி இறந்தாள் என்றுகூடச் சொல்ல முடியவில்லை” என்று அழுதார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை அமைப்பான ‘மனிதம்’ உண்மை அறியும் குழு கள ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டிருக்கிற. இதை அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் இருவரும் வெளியிட்டனர். அதில், “அவசர அவசரமாக உடற்கூறாய்வு நடத்தியுள்ளனர்.

உண்மை கண்டறியும் குழு அறிக்கை
உண்மை கண்டறியும் குழு அறிக்கை

தாய்க்கும் சகோதரருக்கும் தகவல் கொடுக்காமலேயே, நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஈஷா யோகா மையம் சார்பில் பராமரித்துவரும் தகன மையத்தில் சுபஶ்ரீ உடலை எரித்துள்ளனர். தன்னுடைய மனைவி ஜீவசமாதி அடைந்துவிட்டார் என பழனிக்குமார் சொன்னதாகத் தகவல் கூறப்படுகிறது.

`ஈஷா யோகா மையம் செல்வது பாதுகாப்பற்றது’ என சுபஶ்ரீயிடம் தாயும் சகோதரரும் எச்சரித்துள்ளனர். ‘காவல்துறை இந்த வழக்கைச் சரியாக விசாரிக்கவில்லை’ என சுபஶ்ரீயின் சகோதரர் பதிவுசெய்திருக்கிறார். 25.12.22 தேதி பழனிக்குமாரும், அவரின் மகளும் ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ளனர். அப்போது ஜக்கி அவர்களிடம் பேசியிருக்கிறார். ‘பழனிக்குமாருக்கு ஈஷா யோக மையத்தை அறிமுகப்படுத்தியது நான்தான். அங்கு சட்டத்துக்குப் புறம்பான செயல்களைப் பார்த்ததால் அங்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.

பழனிக்குமார் சுபஶ்ரீ
பழனிக்குமார் சுபஶ்ரீ

இது குறித்து நான் சுபஶ்ரீயிடமும் பழனிக்குமாரிடமும் சொல்லியும் கேட்கவில்லை’ என பழனிக்குமாரின் சித்தப்பா சண்முகம் கூறியிருக்கிறார். எனவே, வழக்கை விசாரித்த டி.எஸ்.பி ராஜபாண்டியன் உள்ளிட்டோரைப் பணியிடம் மாற்றம் செய்துவிட்டு, உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

சுபஶ்ரீயின் நண்பர்கள் உறவினர்கள் வட்டாரங்களில் விசாரித்தபோது, “சுபஶ்ரீ மிகவும் தைரியமான பெண். குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவரிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். பழனிக்குமாரும் அவரும் காதலித்து ஈஷா யோக மையத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து அங்கு பயிற்சிகளில் கலந்துகொண்டனர்.

சாலையில் ஓடும் சுபஶ்ரீ
சாலையில் ஓடும் சுபஶ்ரீ

இந்தப் பயிற்சிக்கும் பழனிக்குமார் தன் பெயரைப் பதிவுசெய்திருந்தார். ஆனால், அவரின் பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. செருப்பு இல்லாமல், இரண்டு அடிகூட நடக்காத சுபஶ்ரீ, இவ்வளவு தூரம் செருப்பே இல்லாமல் பதற்றத்துடன் ஓடக்கூடிய சிசிடிவி அதிர்ச்சியளிக்கிறது.

சமீபத்தில் பழனிக்குமார் – சுபஶ்ரீ வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர். அந்த வீட்டில் ஜக்கி வாசுதேவ் படங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. கடந்த முறை சைலன்ட் பயிற்சிக்குச் சென்று வந்தபோதும், சுபஶ்ரீயின் நடவடிக்கைகள் மூன்று நாள்களுக்கு ஒரு மாதிரிதான் இருந்தது. குடும்ப வழக்கப்படி இறந்தவர்களின் உடலைப் புதைக்கத்தான் செய்வார்கள். இங்கு இடம் இல்லை என்பதால் எரித்ததாகச் சொல்கின்றனர்.

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

ஆனால் எதற்காக ஈஷா யோகா மையத்தின் தகன மையத்தில் எரிக்க வேண்டும்... குடும்பத்தினர் அனைவரும் இது தற்கொலை அல்ல எனச் சந்தேகப்படும்போது, பழனிக்குமார் மட்டும் எந்தச் சந்தேகமும் எழுப்பாமல் ஈஷா யோகா மையத்துக்குச் சென்று ஜக்கி வாசுதேவைச் சந்திக்கிறார் என்றால், இதன் பின்னணியிலுள்ள விஷயங்களை விசாரிக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து சுபஶ்ரீயின் கணவர் பழனிக்குமார் கூறுகையில், “மனைவி மாயமாகியிருந்தபோது எங்களுடன் ஈஷா தன்னார்வலர்களும் இணைந்து தேடினர். சுபஶ்ரீ துணிச்சலானவர் என்றுதான் நானும் சொல்கிறேன். போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

பழனிக்குமார் - சுபஶ்ரீ
பழனிக்குமார் - சுபஶ்ரீ

போலீஸ் என்ன சொல்கிறார்களோ நான் அதைக் கேட்பேன். எங்கள் குடும்பத்தில் தாத்தா தொடங்கி இறந்தவர்களை எரிக்கத்தான் செய்திருக்கிறோம். நானே இறந்தால்கூட எரிக்கத்தான் செய்வார்கள்” என்றார்.

இந்த மர்மங்கள் அடங்குவதற்குள் ஈஷா யோக மையம் அருகேயுள்ள இருட்டுப்பள்ளம் பகுதியில் ஸ்ருதி என்ற பெண் ‘ஜக்கி வாசுதேவ் என் கணவர்’ எனச் சொல்லி போலீஸிடம் பேசும் வீடியோ வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ருதி சரளமாக ஆங்கிலம், கன்னடம் பேசுகிறார். ஓரளவுக்குத் தமிழும் பேசுகிறார்.

ஸ்ருதி
ஸ்ருதி

``இந்த வீடியோ வைரலானவுடனே அவரை இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள காப்பகத்தில் வைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் அவர் அங்கு தங்கியிருந்திருக்கிறார். இரவு பகலாக அவருக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பின்னர் உறவினர்கள் இங்கு வராததால், போலீஸாரே கர்நாடகாவுக்குச் சென்று அவர்களை அழைத்து வந்து ஸ்ருதியை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

ஸ்ருதி
ஸ்ருதி

2020-ம் ஆண்டிலிருந்து ஈஷாவுக்கு வரும் ஸ்ருதி, கடந்த சில மாதங்களாகவே, ‘ஜக்கி என் கணவர். அவருடன் என்னைச் சேர்த்துவையுங்கள்’ என்று போலீஸிடம் முறையிட்டிருக்கிறார்.

ஸ்ருதி ஆதாரங்களுடன் சொல்லும்போதுதான் இதை விமர்சிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இரண்டு நாள்கள் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு, போலீஸே கர்நாடகாவிலிருந்து உறவினர்களை அழைத்துவருவதைப் பார்க்கும்போது சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. மற்ற வழக்குகளில் இது நடப்பதில்லை.

ஸ்ருதி
ஸ்ருதி

யாருடைய அழுத்தத்தின் பேரில் இப்படி நடக்கிறது எனத் தெரியவில்லை. இது குறித்து அரசு விசாரிக்க வேண்டும்” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், “சுபஶ்ரீ மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். அது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. விசாரணை முடிந்த பிறகு நாங்களே உங்களிடம் அனைத்துத் தகவல்களையும் சொல்வோம். மக்கள் யார்மீது புகார் அளித்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.

எஸ்.பி பத்ரி நாராயணன்
எஸ்.பி பத்ரி நாராயணன்

மற்ற வழக்குகளை எப்படிக் கடைப்பிடிப்பார்களோ, அப்படித்தான் ஸ்ருதி விஷயத்திலும் நடந்திருக்கிறது. இதற்கென்று தனி கவனமெல்லாம் எதுவும் செலுத்தப்படவில்லை” என்றார்.

இது குறித்து ஈஷா யோகா மையத்திடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். “இந்தச் சம்பவம் யோகா மையத்தின் வளாகத்தில்  நடைபெறவில்லை. மேலும், இந்த வழக்கு போலீஸாரின் விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்தக் கருத்தும் கூற இயலாது” என்று சொல்லிவிட்டனர்.

இந்த நிலையில், `சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறுச் செய்திகளைப் பரப்புவோருக்குக் கடும் கண்டனம்’ தெரிவித்திருக்கும் ஈஷா யோகா மையம், உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஈஷா
ஈஷா

மேலும் அதில், ``சுபஶ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத இந்தத் துயரச் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்விதக் கருத்தும் வெளியிடக் கூடாது என்ற உறுதியில் இத்தனை நாள்கள் அமைதி காத்தோம். சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கியிருக்கிறோம். சிலர் இதைத் தங்கள் சுய லாபத்துக்காக அரசியலாக்க முயற்சி எடுத்துவருகின்றனர்.

இந்த வழக்கு குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகளைச் சில இயக்கங்கள் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தைப் பரப்பும் நபர்கள், இயக்கங்கள் & ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும் உறுதியையும் எவராலும் கலைத்துவிட முடியாது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.