Published:Updated:

`பண்ணை வீட்டுக் கதவில் மின்சாரம்..!' - சென்னைத் தம்பதி கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல்கள்

கொலைசெய்யப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா

சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த தம்பதியரைக் கொலைசெய்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தம்பதியரைத் தேடி பண்ணை வீட்டுக்கு வருபவர்களைக் கொலைசெய்ய, கதவில் மின் இணைப்பு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

`பண்ணை வீட்டுக் கதவில் மின்சாரம்..!' - சென்னைத் தம்பதி கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல்கள்

சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த தம்பதியரைக் கொலைசெய்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தம்பதியரைத் தேடி பண்ணை வீட்டுக்கு வருபவர்களைக் கொலைசெய்ய, கதவில் மின் இணைப்பு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா

சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்துவந்தவர் ஸ்ரீகாந்த் (58). இவர் குஜராத்திலுள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் தலைவராக இருந்துவந்தார். இவரின் மனைவி அனுராதா (55). இந்தத் தம்பதியருக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். சுனந்தா, அமெரிக்காவில் பேராசிரியையாகப் பணியாற்றிவருகிறார். சஸ்வத், அங்கு மருத்துவம் படித்துவருகிறார். அதனால், இவர்கள் இருவரும் அமெரிக்காவில் குடியிருந்துவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சுனந்தாவுக்கு பிரசவம் பார்க்க ஸ்ரீகாந்த்தும், அவரின் மனைவி அனுராதாவும் அமெரிக்காவுக்குச் சென்றனர். பின்னர் 7.5.2022-ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தனர். விமான நிலையத்திலிருந்து இருவரையும் காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல நேபாளத்தைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணா என்பவர் வந்தார். கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்தின் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். கிருஷ்ணாவின் அப்பா சர்மா, 25 ஆண்டுகளாக தோட்டக்காராகவும் காவலாளியாகவும் பணியாற்றிவருகிறார். ஸ்ரீகாந்த்தும் அனுராதாவும் மயிலாப்பூர் வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்தனர். சென்னைக்கு வந்த தகவலை மகன் சஸ்வத்துக்கு ஸ்ரீகாந்த் போனில் தெரிவித்திருந்தார். பின்னர் காலை 9 மணியளவில் சஸ்வத், பெற்றோரை போனில் தொடர்புகொண்டார். ஆனால் இருவரும் போனை எடுக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த சஸ்வத், டிரைவர் கிருஷ்ணாவைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது டிரைவர் கிருஷ்ணா, `நான் காய்கறி வாங்க வெளியில் வந்திருக்கிறேன். பயண அசதியில் இருவரும் தூங்கியிருக்கலாம்’ என்று பதிலளித்திருக்கிறார்.

கூடுதல் கமிஷனர் கண்ணன்
கூடுதல் கமிஷனர் கண்ணன்

இதையடுத்து, சஸ்வத், டிரைவர் கிருஷ்ணாவை மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். அதனால் சந்தேகமடைந்த சஸ்வத், தன்னுடைய உறவினரான பல்லாவரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் விவரத்தைக் கூறினார். உடனடியாக அவர் மயிலாப்பூருக்கு வந்து பார்த்தபோது ஸ்ரீகாந்த் வீடு பூட்டியிருந்தது. இந்தத் தகவலை சஸ்வத்திடம் ரமேஷ் தெரிவித்தார். அதன் பிறகு ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர் மாயமானது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்த் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நகைகள், வெள்ளி[ பொருள்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. அதனால் டிரைவர் கிருஷ்ணாவை போலீஸார் தேடிவந்தனர். போலீஸ் பிடியில் சிக்கிய கிருஷ்ணாவிடம் விசாரித்தபோது ஸ்ரீகாந்த், அனுராதா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதைக் கேட்ட சஸ்வத், சுனந்தா, உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``டிரைவர் கிருஷ்ணா, ஐஐடி-யில் உள்ள பேராசிரியர் ஒருவருக்கு கார் ஓட்டிவருகிறார். இவரின் தந்தை சர்மா, நேபாளத்தைச் சேர்ந்தவர், குடும்பத்தினருடன் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீகாந்த் வீட்டில் தங்கியிருந்தார். ஸ்ரீகாந்த்துக்குச் சொந்தமாக மகாபலிபுரத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டுக்கும் சர்மா குடும்பத்தினர் காவலாளியாகவும் தோட்டக்காராகவும் வேலை பார்த்துவந்தனர். நீண்டகாலமாக சர்மா குடும்பத்தினர் வேலை பார்த்துவந்ததால், அவர்களை ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் முழுமையாக நம்பினர். அதனால் எந்தவித ஒளிவு மறைவின்றி ஸ்ரீகாந்த், அந்தக் குடும்பத்தினருடன் பழகிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சமயத்தில் சர்மாவின் மகனான கிருஷ்ணாவை ஸ்ரீகாந்த், கார் டிரைவராகவும் வைத்திருந்திருக்கிறார். காரில் செல்லும்போது ஸ்ரீகாந்த், சொத்தை விற்ற பணம் 40 கோடி ரூபாய் குறித்து வேறு ஒருவரிடம் போனில் பேசியுள்ளார். அதை கவனித்த கிருஷ்ணாவின் மனதில் கொள்ளையடிக்கும் திட்டம் உருவானது. மேலும் வசதியாக ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வாழ்ந்ததும் கிருஷ்ணாவின் கண்ணை உறுத்தியது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

இதையடுத்து தன்னுடைய நண்பரான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டிரைவர் ரவியிடம் ஸ்ரீகாந்த் வீட்டில் கொள்ளையடிப்பது தொடர்பாக கிருஷ்ணா சில மாதங்களுக்கு முன்பு கலந்தாலோசித்தார். ரவி, சென்னை பெசன்ட் நகரில் தனியாக அறை எடுத்துத் தங்கியிருந்தார். இதையடுத்து கொள்ளையடிப்பதற்கான சந்தர்ப்பத்தை இருவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தச் சமயத்தில்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்காவிலிருந்து ஸ்ரீகாந்த்தும் அவரின் மனைவி அனுராதாகவும் சென்னை வரும் தகவல் கிருஷ்ணாவுக்குத் தெரியவந்தது. அதனால் மூன்று நாள்களுக்கு முன்பு ரவியிடம் விவரத்தைக் கூறிய கிருஷ்ணா பணம், நகைகளைக் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். சம்பவத்தன்று காலையில் ஸ்ரீகாந்த்தையும் அனுராதாவையும் காரில் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த கிருஷ்ணா, ரவியையும் மயிலாப்பூருக்கு வரச் சொல்லியிருந்தார். வீட்டின் சமையலறையில் ஸ்ரீகாந்த் வந்தபோது அங்கு மறைந்திருந்த ரவியும் கிருஷ்ணாவும் மண்வெட்டியாலும் கிரிக்கெட் மட்டையாலும், கத்தியாலும் அவரைத் தாக்கினர். அந்தச் சமயத்தில் அனுராதா படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதனால் ஸ்ரீகாந்த்தின் அலறல் சத்தம் அவருக்குக் கேட்கவில்லை. ரத்த வௌத்தில் கீழே சரிந்த ஸ்ரீகாந்த், சில நிமிடங்களிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து படுக்கையறைக்குள் சென்ற இருவரும் அனுராதாவையும் கொலை செய்தனர். பின்னர் இருவரின் சடலங்களையும் காரில் ஏற்றிக்கொண்டு மகாபலிபுரம் பண்ணை வீட்டுக்குச் சென்றனர். அதற்கு முன்பு வீட்டிலிருந்த லாக்கர்களை திறந்து ஆயிரம் சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை கிருஷ்ணாவும் ரவியும் எடுத்துக்கொண்டனர். பண்ணை வீட்டில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஏற்கெனவே ஏழு அடி ஆழத்துக்கு குழி ஒன்றை இருவரும் தோண்டிவைத்திருந்தனர். அதில் ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரின் சடலங்களைப் புதைத்த இருவரும் பண்ணை வீட்டின் கதவில் மின் இணைப்பைக் கொடுத்தனர். யாராவது கதவைத் தொட்டால் மின்சாரம் தாக்கி மரணமடையும் வகையில் கிருஷ்ணாவும் ரவியும் இந்த ஏற்பாட்டை செய்து வைத்திருந்தனர். இதையடுத்து நகைகள், பொருள்களை பங்கு பிரித்துக்கொண்டு கிருஷ்ணாவும் ரவியும் தங்களின் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். மேலும் கொலை நடந்த இடத்தில் தடயங்களை அழித்த இருவரும் ரத்தக்கறைகளை தண்ணீரால் கழுவிவிட்டிருந்தனர். இந்தச் சமயத்தில் ரமேஷ், ஸ்ரீகாந்த்தின் மகன் சஸ்வத்தும் தகவல் தெரிவித்ததும் நாங்கள் (போலீஸ்) துரிதமாகச் செயல்படத் தொடங்கினோம்.

கொலை வழக்கில் கைதான ரவி, கிருஷ்ணா
கொலை வழக்கில் கைதான ரவி, கிருஷ்ணா

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவையடுத்து, கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் திஷா மிட்டல் வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ரவி, மனோகரன் தலைமையில் எஸ்.ஐ-கள் குமார், கிருஷ்ணன், சஞ்சீவ், பத்மநாபன், காவலர்கள் சத்தியமூர்த்தி, ரகு, கதிரவன், சிவக்குமார், விஸ்வநாதன், பாவேந்தன், ராஜேந்திரன், லோகநாதன் ஆகியோர்கொண்ட தனிப்படையினர் கிருஷ்ணாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் ஆந்திரா நோக்கி சென்றுக்கொண்டிருப்பதைக் கண்டறிந்தோம். பின்னர் ஆந்திர மாநில போலீஸாரின் உதவியோடு கிருஷ்ணா, ரவி ஆகியோரைப் பிடித்தோம். அவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். பிரேத பரிசோதனையில் இருவரும் கட்டையாலும், கத்தியாலும் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

ரவி, கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரித்தபோது, நகைகள், பணத்துக்காகத்தான் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் கிருஷ்ணா, சென்னையில் டிரைவராக வேலை செய்தபோது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அந்தப் பெண் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மகனோடு வசித்துவந்த கிருஷ்ணா, தொழிலதிபர் ஸ்ரீகாந்த்தைக் கொலை செய்துவிட்டு நகை, பணத்தோடு நேபாளத்துக்குச் சென்று செட்டிலாகிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். ஆனால் கொலை நடந்த ஐந்து மணி நேரத்தில் கிருஷ்ணா, ரவியைப் பிடித்து மொத்த நகைகளையும் பறிமுதல் செய்துவிட்டோம்" என்றனர்.

கொலையாளிகளைப் பிடித்தது தொடர்பாக பேட்டி அளிக்கும் கூடுதல் கமிஷனர் கண்ணன்
கொலையாளிகளைப் பிடித்தது தொடர்பாக பேட்டி அளிக்கும் கூடுதல் கமிஷனர் கண்ணன்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரைக் கொலை செய்யப் பயன்படுத்திய கிரிக்கெட் மட்டையையும், அனுராதாவின் செருப்பையும் கிருஷ்ணாவும் ரவியும் பண்ணை வீட்டில் வைத்து எரித்துள்ளனர். கொலை செய்யப் பயன்படுத்திய மண்வெட்டி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். கிருஷ்ணா, சர்மா இருவருக்கும் மாதந்தோறும் சம்பளத்தைக் கொடுத்த ஸ்ரீகாந்த், அவர்கள் குடும்பத்தோடு தங்கியிருக்க அறையையும் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். சர்மாவின் குடும்பத்தினர் மீது ஸ்ரீகாந்த் வைத்திருந்த நம்பிக்கையை, பணத்துக்கு ஆசைப்பட்டு கிருஷ்ணா பொய்யாக்கிவிட்டார்" என்றார்.

இந்த வழக்கை சிறப்பாகத் துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும், கூடுதல் கமிஷனர் கண்ணனும் பாராட்டினர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism