Election bannerElection banner
Published:Updated:

பாலியல் புகார்; ஃபேஸ்புக் பதிவால் சிக்கல்! - மகாராஷ்டிர அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே

`கடந்த 2019-ம் ஆண்டு முதல் அந்தப் பெண், அவரது சகோதரர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் என்னை பிளாக்மெயில் செய்து மிரட்டிவருகின்றனர்.’ - தனஞ்சய் முண்டே

மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே (Dhananjay Munde), பெண் பாடகி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். பாடகி அளித்த புகாரை மறுத்துள்ள முண்டே, பாடகியின் சகோதரியுடன் தனக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பாடகியும், அவரது சகோதரியும் சகோதரனுடன் சேர்ந்து தன்னை மிரட்டுவதாகவும் தனஞ்சய் முண்டே புகார் கூறியிருக்கிறார்.

Representational Image
Representational Image

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் பாடகி ஒருவர் மும்பை போலீஸில் நேற்று அளித்த புகாரில், சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே கடந்த 2006-ம் ஆண்டு முதல் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் அறிமுகம் இருப்பதாகக் கூறி பாலிவுட்டில் வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்த முண்டே, தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை: சினிமா, சீரியலில் நடிக்க வாய்ப்பு! - நம்பிய இளம்பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்

பாடகியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அமைச்சர் தனஞ்சய் முண்டே இது குறித்து ஃபேஸ்புக்கில் விளக்கமளித்திருக்கிறார். அதில், `கடந்த 2003-ம் ஆண்டு முதல் தனது திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, ஒரு பெண்ணுடன் வாழ்ந்துவந்தேன். அது எனது குடும்பம், மனைவி மற்றும் நண்பர்களுக்குத் தெரியும். அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய எல்லா ஆவணங்களிலும் பெற்றோராக எனது பெயரைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இருவரும் எனது குடும்பத்தின் ஓர் அங்கம். அந்தப் பெண்ணையும், அவருடைய சகோதரரையும் எனது தொழிலில் உதவியாக வைத்திருப்பதன் மூலம் அவர்களை நன்கு கவனித்து வந்தேன்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

கடந்த 2019-ம் ஆண்டு முதல் அந்தப் பெண், அவருடைய சகோதரர், சகோதரி ஆகியோர் என்னை பிளாக்மெயில் செய்து மிரட்டிவருகின்றனர். இது குறித்து ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்திருக்கிறேன். அந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வரவிருக்கிறது.

தற்போது பாடகி அளித்த புகார், என்னை அச்சுறுத்துவதோடு, நீதிமன்ற வழக்கை அவரின் சகோதரிக்கு ஆதரவாகத் தீர்ப்பதற்குக் கொடுக்கும் அழுத்தம். இது எனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கவும், அவதூறு செய்வதற்கும், என்னை அச்சுறுத்துவதற்குகான முயற்சிதான்’’ என்று அமைச்சர் தனஞ்சய் முண்டே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் கிரித் சோமையா, `தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வரை அமைச்சரவையில் இருப்பதற்கான தார்மிக உரிமையை தனஞ்செய் முண்டே இழந்துவிட்டார்’ என்று விமர்சித்திருக்கிறார். அவரைப் பதவிநீக்கம் செய்யவும் பா.ஜ.க வலியுறுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு