Published:Updated:

`காடை' கறிக்காக வேட்டையாடப்படும் காக்கைகள்!- அதிர்ச்சி கொடுக்கும் தனுஷ்கோடி கும்பல்

வேட்டையாடப்பட்ட காக்கைகள்
வேட்டையாடப்பட்ட காக்கைகள் ( உ.பாண்டி )

கடல் காக்கைகள், புள்ளு குருவிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இரை தேடி வரும் செங்கால் நாரை எனப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆகியன டிசம்பர் துவங்கி ஏப்ரல் மாதம் வரை அதிகளவில் வந்து செல்கின்றன.

ஒற்றுமையின் சின்னமாக குறிப்பிடப்படும் காக்கைகளை மதுவைப் பருக வைத்து வேட்டையாடும் சம்பவம் தனுஷ்கோடி பகுதியில் நடந்துவருகிறது. இச்செயலில் ஈடுபடுவர்களை வனத்துறையினர் கண்டுகொள்ளாததால் வெளிநாடுகளில் இருந்து இரை தேடி வந்திருக்கும் ஃபிளமிங்கோ பறவைகளும் பாதிப்புக்குள்ளாகும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மது உணவு உண்டு மயங்கிய காக்கைகள்
மது உணவு உண்டு மயங்கிய காக்கைகள்
உ.பாண்டி

கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழ்ந்து வருவது தனுஷ்கோடி முதல் தூத்துக்குடி வரையிலான கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் ஆகும். இப்பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள் உள்ளன. குறிப்பாக இப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன.

இவை தவிர கடல் காக்கைகள், புள்ளு குருவிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இரை தேடிவரும் செங்கால் நாரை எனப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆகியன டிசம்பர் துவங்கி ஏப்ரல் மாதம் வரை அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பெய்த மழையினால் இதமான சூழல் நிலவி வரும் வகையில் அதிகளவிலான பறவைகள் வெளிநாடுகளிலிருந்து வரத் துவங்கியுள்ளன.

தனுஷ்கோடி வந்துள்ளா ஃப்ளமிங்கோ பறவைகள்.
தனுஷ்கோடி வந்துள்ளா ஃப்ளமிங்கோ பறவைகள்.
உ.பாண்டி

இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் சவுக்கு மரக் காடுகள் நிறைந்த பகுதியில் உள்ள காக்கைகளை சில சமூக விரோதிகள் ஓட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் `காடை' கறி என கூறி விற்பனை செய்வதற்காகப் பிடித்து வருகின்றனர். இதற்கென ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் முகாமிட்டு தங்கியுள்ள ஒரு குறிப்பிட்ட கும்பல் இக்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான காக்கைகளைப் பிடிக்க வலை விரித்தால் அது வெளியாட்களுக்குத் தெரிந்துவிடும் என்பதால் மாற்று வழியில் காக்கைகளை மயக்கமடையச் செய்யும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி மது ஊற்றிய தட்டில் காராபூந்திகளைப் போட்டு காக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வைத்துவிட்டு காத்திருக்கின்றனர்.

இதை உணவுப்பொருள் எனக் கருதி உண்ண வரும் காக்கைகள், மது கலந்த காராபூந்திகளை உண்ட சிறிது நேரத்திலேயே மயங்கிய நிலையில் பறக்க முடியாமல் தரையில் விழுகின்றன. இவற்றின் மீது சாக்குகளைப் போட்டு முழுமையாக மயங்கும் வரையில் காத்திருக்கும் இந்த வேட்டையாளிகள், பின்னர் மயங்கிய காக்கைகளைச் சேகரித்து வெளியூர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

காக்கைகளை வேட்டையாடும் நபர்கள்.
காக்கைகளை வேட்டையாடும் நபர்கள்.
உ.பாண்டி

இதுபோன்ற வேட்டையாடுதலுக்கு தற்போது தனுஷ்கோடி பகுதிக்கு வந்துள்ள ஏராளமான கடற்காக்கைகள், புள்ளுகுருவிகள், வெளிநாட்டுப் பறவையான ஃபளமிங்கோ ஆகியனவும் பழியாகும் நிலை ஏற்படும் முன்னர் காக்கைகளை வேட்டையாடும் கும்பல் மீது வன உயிரின பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் காடைக் கறி என கூறி விற்கப்படும் காக்கை கறி குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு