Published:Updated:

`குட் டச், பேட் டச் விதியை மீறிவிட்டார்!'- மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகொடுத்த தலைமையாசிரியர்

எம்.வடிவேல்

பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லைகொடுத்த சம்பவம், தர்மபுரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூச்சூர் அரசுப் பள்ளி
பூச்சூர் அரசுப் பள்ளி

தர்மபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்துள்ள பத்ரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூரில் அரசினர் உயர் நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இந்தப் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களிடம் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணி
தலைமை ஆசிரியர் சுப்பிரமணி

தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பூச்சூர் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளைத் தலைமை ஆசிரியர் அறைக்கு தனியாக அழைத்து, மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக, மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த பெற்றோர், இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். விரைந்து வந்த ஏரியூர் போலீஸார், தலைமை ஆசிரியரை மீட்டு, அவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை ஏரியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை அடுத்து, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுரேஷிடம் காவல்துறை புகார் மனுவைப் பெற்றுள்ளது. அந்தப் புகார் மனுவில், ``பள்ளி மாணவிகளின் ரிக்கார்டு நோட்டுகளைப் பார்ப்பதாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு மாணவிகளைத் தனியே வரவழைத்து, தோள்மீது கை வைத்துக்கொண்டு முதுகைச் சுரண்டுவது, கட்டிப்பிடிப்பது போன்ற தவறான செயல்களைச் செய்துள்ளார். இவை அனைத்துமே, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லிக்கொடுத்த குட் டச், பேட் டச் விதிமுறைகளை மீறி பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி நடந்து கொண்டதாகவும், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான சங்கடத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

ஆசிரியர் சுரேஷின் புகார் மனுவை அடுத்து, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியிடம் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லதா, ஏரியூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரி டிஇஒ பாலசுப்பரமணியும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணி குற்றம் செய்தது உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.