Published:Updated:

பட்டுக்கோட்டை: மனைவியின் புகார்; தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடு! - காப்பகத்தில் சிறுவன் கொலை?

காப்பகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள்
காப்பகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள்

மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆய்விற்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே கலிமா பீவி சொன்னது போல் அவை குறிப்பிட்ட சிறுவனின் எலும்புகள் தானா கொலை செய்து புதைக்கப்பட்டானா என்பது தெரிய வரும்.

பட்டுக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வரும் ஒருவர், காப்பகத்தில் இருந்த சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாக காப்பகத்தை நடத்தி வரும் உரிமையாளரின் மனைவியே புகார் கொடுத்திருந்த நிலையில், சிறுவன் புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தினை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டிய போது எலும்புக் கூடு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடுக்கப்பட்ட  எலும்பு கூடு
எடுக்கப்பட்ட எலும்பு கூடு

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக்அப்துல்லா. இவர் அதே பகுதியில் அவிஸோ என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் நடத்தி வருகிறார். இதில் 20க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.வெளிநாட்டில் உள்ளவர்களிடமும், உள்ளூரில் பலரிடமும் நிதி திரட்டி காப்பகத்தை முகமது ஷேக்அப்துல்லா பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது ஷேக் அப்துல்லாவின் மனைவியான கலிமா பீவி என்பவர், ``காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன் 15 வயது சிறுவன் ஒருவரை முகமது ஷேக் அப்துல்லா தாக்கினார். அப்போது அந்த சிறுவன் இறந்து விட்டதாகவும் பின்னர் அந்த சிறுவனின் உடலை காப்பகத்திலியே குழி தோண்டி புதைத்து விட்டார். மொழி தெரியாமல் வந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். அப்பெண் கர்ப்பமான நிலையில் இறக்கவும், உடல் நிலை முடியாமல் இறந்து விட்டதாக கூறி அந்த பெண்ணின் உடலை உரியவர்களிடம் ஒப்படைத்தாக” தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருந்தார்.

முகமது ஷேக் அப்துல்லா
முகமது ஷேக் அப்துல்லா

அதன் விசாரணை நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது காப்பகத்தில் கலிமா பீவி சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை காண்பித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தரணிகா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நடராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழியிலிருந்து மண்டை ஓடு, எலும்புகூடு ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவை அந்த சிறுவனின் எலும்பு மற்றும் மண்டை ஓடு தானா என்பதை அறியவும் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிப்பதற்காகவும் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகளை அதிகாரிகள் சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் சோதனைக்காக ஒப்படைத்தனர். காப்பகத்தில் மனித எலும்புகள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுவனை கொலை செய்ததாக புகார் அளித்த கலிமா பீவி
சிறுவனை கொலை செய்ததாக புகார் அளித்த கலிமா பீவி

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், ``கடந்த வருடம் கலிமா பீவி சிலருடன் சேர்ந்து கொண்டு காப்பகத்துக்கு சொந்தமான பணம் ரூ 5 லட்சத்தை வங்கியிலிருந்து முறைகேடாக எடுத்து சென்று விட்டதாகவும், கலிமா பீவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலிமாவின் கணவரும், காப்பகத்தை நடத்தி வருபவருமான முகமது ஷேக் அப்துல்லா போலீஸில் புகார் அளித்தார்.

காஞ்சிபுரம்: `பயமா இருக்குடா...'  இருட்டில் பேராசிரியை கொலை! - காட்டிக்கொடுத்த டி ஷர்ட் பாக்கெட்

அதனை தொடர்ந்து கலிமா பீவியும் தனது கணவர் காப்பகத்தில் இருந்த சிறுவனை தாக்கிய போது அந்த சிறுவன் இறந்து விட்டான். இதனை யாருக்கும் தெரியாமலேயே காப்பகத்தில் உள்ள அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் உதவியுடன் புதைத்து விட்டார். மேலும் தமிழ் தெரியாத பெண் ஒருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். அவரும் இறந்து விட்டார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருந்தார்.

காப்பகம்
காப்பகம்

அதற்கான விசாரணையில் சிறுவன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தையும் காண்பித்தார். அந்த இடத்தை தோண்டிய போது மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடைத்தது. அவை ஆய்விற்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே கலிமா பீவி சொன்னது போல் அவை குறிப்பிட்ட சிறுவனின் எலும்புகள் தானா? கொலை செய்து புதைக்கப்பட்டதா என்பது தெரிய வரும். அதன் பிறகே மற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு