திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்தராஜ். யூடியூப் சேனல் நடத்திவரும் இவர், அதில் நடிப்பதற்காக தாடிக்கொம்புவைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவரை அணுகியுள்ளார். திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்தவர் என்ற அடிப்படையில் அவரை நடிக்க வைத்துள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்நிலையில், திவ்யபாரதி தன்னை ஏமாற்றி 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக ஆனந்தராஜ் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ’என்னுடைய யூடியூப் சேனலுக்கு நடிக்க வந்த திவ்யபாரதி கொடைக்கானலில் உள்ள எனது வீட்டில் குடும்பத்துடன் தங்கி அனைவரிடமும் நன்றாகப் பழகினார். அவர் 2 பெண் குழந்தைகளையும் அழைத்துவந்து, தன் அக்காவின் குழந்தைகள் என்றும், அக்கா கணவர் ஓடி விட்டதால் தானே வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். இதனையறிந்த என் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதற்கு திவ்யபாரதி ஒப்புக்கொண்ட போதிலும் திருமணம் செய்யாமல் காலம்தாழ்த்தி வந்தார்.
திண்டுக்கல்லில் தனக்குத் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கிய அவருக்கு மாத மாதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தேன். அவர் மருத்துவச் செலவிற்காக பணம் வேண்டும் எனக் கேட்டதால் 9 லட்ச ரூபாய் கொடுத்தேன். மேலும், நாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்தானே என அவர் கேட்டதன் அடிப்படையில் 8 பவுன் தங்க நகைகள் வாங்கிக்கொடுத்தேன்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டு கொண்டே சென்றார். அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமானதும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து என்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்த அவர் மீது தாடிக்கொம்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து திவ்யபாரதியும் திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரனிடம், ’’ஆனந்தராஜ் என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார். அதுமட்டுமல்லாது அவரது ஆசைக்கு இணங்கும்படி கூறி பாலியல் தொந்தரவும் கொடுத்தார். இதற்கு தான் உடன்படாததால் என் மீது மோசடி புகார் சுமத்துகிறார். என் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழும் எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார். ஏற்கெனவே திருமணம் முடித்தவர். அவரின் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததால்தான் அவர் பிரிந்து சென்றுள்ளார்’’ எனக் கூறியுள்ளார்.

இருதரப்பின் புகார்களை பெற்றுக்கொண்ட எஸ்.பி, வழக்கை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடந்துவருகிறது.