Published:Updated:

மருத்துவமனையில் எப்படியிருக்கிறார் `சரவண பவன்’ ராஜகோபால்? #SpotVisit

கலிலுல்லா.ச

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த `சரவணபவன்' உரிமையாளர் ராஜகோபால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து ஆதங்கப்படுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ராஜகோபால்
ராஜகோபால்

சென்னையில் மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு கிளைகளைப் பரப்பியிருக்கும் `சரவண பவன்' ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமாரைப் படுகொலை செய்த வழக்கில் சிக்கினார். ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவதாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்தத் திருமணத்துக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதியதால் கொடைக்கானல் மலைப்பாதையில் கொல்லப்பட்டார் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உடையவரான ராஜகோபால், ` மூன்றாவதாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொண்டால் இன்னும் அதிக உயரத்துக்குச் செல்லலாம்' என அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கூறிய அறிவுரையால் இப்படியொரு கொலையை அரங்கேற்றவும் துணிந்தார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராஜகோபால், அவரது மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில், 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌திக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் ராஜகோபால். இதை விசாரித்த நீதிமன்றம், 10 ஆ‌ண்டு ‌சிறைத் த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் ராஜகோபால். அங்கும், `ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும்' எனக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தனர் நீதிபதிகள்.

உடல்நிலை சரியில்லை - சரணடைய அவகாசம் கோரும் ராஜகோபால்!

இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்க்காதவர், உடல்நிலையைக் காரணம் காட்டி சரணடைவதில் சிக்கல் இருப்பதை விவரித்தார். ஆனாலும், அவர் சரணடைய வேண்டும் என்பதை உறுதிபடத் தெரிவித்தது நீதிமன்றம். செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நலன் குறித்து அறிவதற்காக ஸ்டான்லிக்குச் சென்றோம்.

தீவிர சிகிச்சைப்பிரிவு
தீவிர சிகிச்சைப்பிரிவு

மருத்துமனையின் முதல் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ராஜகோபால். அந்த வார்டுக்கு வெளியே இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தனர். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு முன்பாக பார்வையாளர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நான் சென்றிருந்தபோது ராஜகோபாலின் குடும்ப உறுப்பினர்களை அங்கு பார்க்க முடியவில்லை. அவரது உதவியாளர்கள் உட்பட சரவண பவன் ஊழியர்களே நிரம்பியிருந்தனர். ``ஓஹோனு இருந்த காலத்துல அண்ணாச்சி மாதிரி ஒருத்தரப் பாக்கவே முடியாதுங்க. என்ன உதவி கேட்டாலும் உதவி செய்வார். இப்ப இப்படியொரு நிலைமைல அவரைப் பார்க்கறதுக்கே கஷ்டமா இருக்கு" என வேதனையோடு பேசத் தொடங்கிய சரவண பவனின் முக்கிய அலுவலர் ஒருவர்,

``சென்னைக்கு வெறும் மஞ்சப்பையோட வந்தவர். பெருசா படிக்கலை. மொதல்ல டீக்கடை வேலை, அப்புறம் சின்னதா ஒரு மளிகைக் கடை நடத்துனாரு. சாமியார் ஒருத்தரோட உத்தரவாலதான் ஓட்டலைத் தொடங்கி நடத்தினார். பெரிய உயரத்துக்குப் போனாலும், குடும்பத்துல பிரச்னை. இரண்டாவது மனைவி கிருத்திகா கூட பெரியளவுக்கு சண்டை நடந்துச்சு. ரொம்ப நெருங்கிய ரத்த சொந்தங்களாலேயே அவரோடு நிம்மதி பறிபோச்சு.

ராஜகோபால்
ராஜகோபால்

அடுக்கடுக்காக வழக்குகள், ஓட்டலை சரியா கவனிக்க முடியாதது எனப் பல வருஷமாவே வேதனையில் இருக்கார் அண்ணாச்சி. அவரை மட்டுமே நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் இருக்குது. `கேஸ் நல்லபடியா போகுது, நமக்கு எந்தப் பிரச்னையும் இல்ல’னு சொல்லிச் சொல்லியே அவரை ஏமாத்திட்டாங்க. அவர் நேரடியா கவனிச்சிருந்தால், இவ்ளோ சிக்கல்கள் வந்துருக்காது. இப்போ கூட பாருங்க, நாங்க மட்டும்தான் அவர் கூட இருக்கோம்” என வேதனைபட்டவர், `` ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயக் கோளாறு, நுரையீரல் பிரச்னைன்னு ரொம்பக் கஷ்டப்படறார் அண்ணாச்சி. இன்னும் செயற்கை சுவாசத்துலதான் இருக்கார்” என்றார் கலங்கியவாறே.