Published:Updated:

`வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்!' - நெகிழும் இயக்குநர் ரமணா

பிரேம் குமார் எஸ்.கே.

என் உணர்வுக்கு மதிப்பளித்து, என் பதிவைப் பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனக்கு ஆறுதலும் துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

Director Ramana
Director Ramana

நடிகர் விஜய் நடித்த `திருமலை', `ஆதி', தனுஷை வைத்து `சுள்ளான்' ஆகிய படங்களை இயக்கியவர், ரமணா. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால், படம் இயக்குவதிலிருந்து விலகியிருந்தார். சிகிச்சை முடிவில், 'கேன்சரிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.

Ramana with family
Ramana with family

இந்நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவர் தரக்குறைவாகப் பேசியதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார். `பிள்ளைகளின் பிறந்தநாளுக்காக நான், என் மனைவி, மகளுடன் காரில் வெளியே சென்றிருந்தேன். பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே யூ டர்ன் எடுக்கவேண்டியிருந்தது. பச்சை சிக்னல் தென்பட்டது. நான் யூ டர்ன் செய்தேன். அப்போது, சிக்னல் மாறியதை நான் கவனிக்கவில்லை.

இதனால் காவல்துறையினர் என்னை வழிமறித்து, சாலை விதிகளை மீறியதாகச் சொல்லி அபராதம் கட்டச் சொல்லினர். 'நான் விதியை மீறவில்லை' என அபராதம் கட்ட மறுத்தேன். இது தொடர்பாகப் பேசும்போது, உதவி ஆய்வாளர் குமார் என்னைப் பார்த்து, `ஏய்... தள்ளி நின்னு பேசுடா... மேல எச்சில் படப்போகுது. உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்...' என்று கூற, கேன்சரால் பாதிக்கப்பட்டதை அறிந்தும் அவர் அப்படிப் பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Ramana fb post
Ramana fb post

இந்தச் சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'காவல் துறையினர் இப்படியா நடந்துகொள்வது' என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ரமணா.`நெஞ்சார்ந்த நன்றிகள்' எனத் தொடங்கும் அந்தப் பதிவில், `கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்வுக்கு மதிப்பளித்து, என் பதிவைப் பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும் துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்' எனக் குறிப்பிட்டு,

director ramana
director ramana

` காவல்துறை உயர் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி (உதவி காவல் ஆணையர்), ஷோபனா (ஆய்வாளர்) இருவரும் என் வீட்டுக்கு வந்து, மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்துவிட்டு வருத்தம் தெரிவித்தார்கள்.

`ஏய் தள்ளி நின்னு பேசு. எனக்கும் ஒட்டிக்கும்!' - டிராஃபிக் போலீஸாரின் செயலால் கலங்கிய இயக்குநர் ரமணா

மேலும், துணை கமிஷனர் பெரோஸ் கான் அப்துல்லா, என்னுடன் தொலைபேசி மூலம் நடந்தவற்றைக் கேட்டறிந்தார். நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ்வதற்கு உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.