Published:Updated:

`இந்தக் குழந்தைக்கு நீதி வேண்டும்!’- நாகையில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக திரண்ட கிராமம்

பிரவசம் முடிந்து வீடு திரும்பிய தீனா, காதலன் அய்யப்பன் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்த, அவருக்கு ஆதரவாக கிராமத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண்
கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் காதலன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையைக் கண்டித்து, காதலன் வீட்டு வாசலில் கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண் போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான கிராமத்தினரும் பங்கேற்றது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண்
கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண்

நாகை மாவட்டம், நாகூர் அருகேயுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் மகளான தீனா பி.ஏ பட்டதாரி. மாற்றுத்திறனாளியான இவரும், இதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் அய்யப்பனும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில் தீனா கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் கடந்த நவ.9 - ம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் தீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரவசம் முடிந்து வீடு திரும்பிய தீனா, காதலன் அய்யப்பன் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்த, அவருக்கு ஆதரவாக கிராமத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த, போலீஸார் தீனாவிடம் விசாரணை நடத்தியபோது, ``சாதி ஒரு தடையில்லை. உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்" என்று ஆசை வார்த்தை கூறியதை நம்பி ஏமாந்துட்டேன். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டேன். அவரைத் தொடர்புகொள்ள முடியலை. எனவேதான் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி., எஸ்.பி என அனைவரிடமும் புகார் தந்தேன். அதற்கும் பலனில்லை. வேறு வழி தெரியலை. என் குழந்தைக்கு நீதி வேண்டும்" என்றார்.

நீதி வேண்டும்
நீதி வேண்டும்

``காதலிக்கும் போதும், நெருங்கிப் பழகும்போதும் தெரியாத சாதி, திருமணம் என்றால்தான் தெரியுமா. தலைமறைவாக உள்ள அய்யப்பனைத் தேடிப்பிடித்து வந்து தீனா கழுத்தில் தாலி கட்ட வைக்கணும்.

அப்பதான் இந்தக் குழந்தை தந்தை முகம் பார்க்கும். இல்லேன்னா அநாதையாகி விடும்" என்று கிராமத்தினர் ஒரே குரலில் ஒருமித்து கூறினர். விரைவில் அய்யப்பனைக் கண்டறிந்து கொண்டு வருவதாக போலீஸார் உறுதிகூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண்
கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண்

இதுபற்றி திட்டச்சேரி போலீஸாரிடம் பேசியபோது, "இவ்வழக்கில் எங்களுக்கு சம்பந்தமில்லை. மேலிடத்தில் கொடுத்துள்ள புகார் பற்றி விசாரித்து வருகிறார்கள். வெளியூரில் தலைமறைவாக உள்ள அய்யப்பன் பிடிபட்டவுடன் தீனா பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்" என்றனர்.