Published:Updated:

`ஒரே ஸ்டைல்; 9 சம்பவங்கள்; சீரியல் கில்லர்ஸ்'- திஷா கொலையாளிகள் குறித்து தெலங்கானா போலீஸ் அதிர்ச்சி

திஷா என்கவுன்டர் சம்பவம்
திஷா என்கவுன்டர் சம்பவம்

திஷா என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தெலங்கானா திஷா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இதேபாணியில் இருந்துள்ளது. திஷா கொல்லப்பட்டது நவம்பர் 27-ம் தேதி. மருத்துவரான திஷா தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் செல்வது வழக்கம். திஷா தன் செல்போனில் இருந்து இரவு 9 மணிக்கு சகோதரிக்கு போன் செய்துள்ளார். ‘எனக்கு பயமாக இருக்கு. நான் டோல்கேட்டுல இருக்கேன். வண்டி பஞ்சராகிடுச்சு. லாரி டிரைவர் ஒருத்தர் வண்டிய எடுத்துக்கிட்டு போயிருக்காரு; இங்க இருக்குறவங்க என்ன ஒரு மாதிரி பாக்குறாங்க’ இதுதான் திஷா கடைசியாகப் பேசியது. பின்னர் திஷா போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் சடலமாகத்தான் திஷாவை அவரின் குடும்பத்தினர் பார்த்தனர். எரிந்த நிலையில் கிடந்த சடலத்தின் ஆடை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த விநாயகர் டாலரைக் கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டார். திஷா சொன்ன டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார் லாரி ஓட்டுநர்களான முகமது ஆரீஃப், சென்ன கேசவலு, கீளினர்களான சிவா, நவீன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்தனர். இந்த நால்வரும் அதன்பின்னர் என்கவுன்டர் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த என்கவுன்டருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாயின. என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

என்கவுன்டர் செய்யப்பட்ட நான்கு பேரில் லாரி ஓட்டுநர்களான முகமது ஆரீஃப், சென்ன கேசவலு இருவரும் இதே பாணியில் பல கொலைகளைச் செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின்போது இதை இருவரும் ஒப்புக்கொண்டதாக சைபராபாத் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. லாரியில் லோடு ஏற்றிச்செல்லும்போது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் 9 பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தெலங்கானா - கர்நாடகா எல்லைப்பகுதியில் 6 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறியதையடுத்து, பழைய ஃபைல்களை தூசுத் தட்டத்தொடங்கியுள்ளனர் தெலங்கானா காவல்துறையினர்.

கொலை
கொலை

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், திருநங்கைகளைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த இருவரின் மொபைல் எண்கள் சம்பவம் நடந்த 9 இடங்களில் இருந்ததா என போலீஸார் ட்ரேஸ் செய்து வருகின்றனர். இருவரும் சுமார் 15 சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சைபராபாத் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்களின் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். திஷா வழக்கில் தடயவியல் துறையினரிடமிருந்து ஆதாரங்களைப் பெற்ற பின்னர் காவல்துறையினர் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு