Published:Updated:

மும்பை: `பணம் கொடுப்பதில் தகராறு: ஓலா டிரைவரை காரிலேயே கொலை செய்த சகோதரர்கள்!'

Murder
Murder

சுங்கச்சாவடிக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓலா டாக்சி டிரைவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பை காந்திவலி பகுதியை சேர்ந்த யூசுப் அலி மற்றும் முஸ்கான் அலி சகோதரர்கள் அருகில் உள்ள பன்வெல் செல்ல சந்தோஷ் என்பவரின் ஓலா டாக்சியை புக் செய்து சென்றனர். அவர்கள் டாக்சியில் பன்வெல் சென்ற பிறகு அங்கிருந்து மலைப்பகுதியான கண்டாலாவிற்கு செல்லவேண்டும் என்று கூறினர். அதற்கு ரூ.5 ஆயிரம் ஆகும் என்று சந்தோஷ் தெரிவித்தார். கண்டாலா சென்ற உடன் கர்நாடகாவில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தங்களது தாயாரை பார்க்கவேண்டும் என்று விரும்பினர். அவர்கள் ஓலா காரிலேயே செல்ல திட்டமிட்டு சந்தோஷிடம் கேட்டனர். அவரும் காரில் இருந்த ஓலா ஆப்பை ஆப் செய்து விட்டு காரை கர்நாடாகா நோக்கி செலுத்தினார்.

யூசுப் அலி
யூசுப் அலி

செல்லும் வழியில் சுங்கச்சாவடி வந்தது. அதற்கு பணம் கொடுக்கும்படி அலி சகோதரர்களிடம் சந்தோஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் சிஎன்ஜி கேஸ் ஸ்டேசன் வந்தது. கேஸ் நிரப்பவேண்டியிருந்தது. அதற்கு பணம் கொடுக்கும்படி அலி சகோதரர்களிடம் சந்தோஷ் தெரிந்தார். அவர்களில் யூசுப் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்தார். ஆனால் கார்டில் பணம் இல்லை என்று தெரிய வந்தது. இதனால் அவர்களிடம் பணம் இல்லை என்று உணர்ந்த சந்தோஷ் காரை நிறுத்திவிட்டு தனக்கு பணத்தை கொடுக்கும்படி கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நேரம் யூசுப் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து காட்டி காரை செலுத்தும்படி மிரட்டினார். ஆனால் சந்தோஷ் யூசுப்பிடமிருந்து கத்தியை பிடுங்கினார். இதில் யூசுப்பிற்கு கையில் காயம் ஏற்பட்டது. காரின் பின் சீட்டில் இருந்த முஸ்கான் பின்புறத்தில் இருந்து சந்தோஷை பின்நோக்கி இழுத்து பின் சீட்டிற்கு கொண்டு வந்து அவரிடமிருந்த கத்தியை பிடுங்கிக்கொண்டார்.

யூசுப் காரை ஓட்டினார். பின்னால் இருந்த முஸ்கான் கோபத்தில் சந்தோஷ் கழுத்தை கத்தியால் அறுத்து கொலைசெய்து லோனவாலா மலைப்பகுதியில் உடைல வீசிவிட்டு, காரை அருகில் உள்ள ஓட்டலுக்கு கொண்டு சென்றனர். காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் கார் எங்கு இருக்கிறது என்பதை காரின் உரிமையாளர் கண்டுபிடித்து கார் நின்ற ஓட்டலுக்கு போன் செய்து கார் நிற்கிறதா என்று கேட்டார். ஓட்டல் ஊழியர்களும் கார் நிற்பதை உறுதி செய்தனர். உடனே காரில் இருப்பவர்களிடம் கார் உரிமையாளர் பேசவேண்டுமென்று தெரிவித்தார். இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் காரில் இருந்தவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் பேசாமல் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். காரை கோலாப்பூர் மாவட்டத்தில் அப்படியே விட்டுவிட்டு இருவரும் தப்பி சென்றுவிட்டனர். உள்ளூர் போலீஸாரின் உதவியோடு காரில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அலி சகோதரர்கள் மும்பைக்கு திரும்பினர். கார் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். டாக்சியை அலி சகோதரர்கள் தான் பதிவு செய்திருந்தனர் என்பதை ஓலா நிறுவனத்தின் மூலம் தெரிந்து கொண்ட போலீஸார் இரண்டு பேரையும் பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் சந்தோஷ் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். ஆனால் பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் கொலை நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் வியாழக்கிழமை இரண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு