Published:Updated:

திண்டுக்கல்: மதுபானம் வாங்குவதில் தகராறு; கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு!

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம்

திண்டுக்கல்லில் மது வாங்குவதில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

திண்டுக்கல் அருகேயுள்ள அச்சராஜக்காபட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா, மாலைப்பட்டியை சேர்ந்த கங்காதரன், சிரஞ்சீவி, இவரின் சகோதரர் முருகேசன், சங்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய ஐந்து பேரும் பெயின்ட் அடிக்கும் தொழில் செய்துவருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும் திண்டுக்கல் திருமலைக்கேணி சாலையில், உத்தனம்பட்டி பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் வாங்கியுள்ளனர். அப்போது மதுபானம் வாங்கப் பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், சமாதானமான அவர்கள், அந்தப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிரஞ்சீவி, முருகேசன் மற்றும் முருகேசன்
கைதுசெய்யப்பட்ட சிரஞ்சீவி, முருகேசன் மற்றும் முருகேசன்

பின்னர், மாலை 4 மணிக்கு மீண்டும் ஐந்து பேரும் மது பானம் வாங்கியுள்ளனர், மது குடிக்கும்போது சிரஞ்சீவி மற்றும் அவரின் சகோதரர் முருகேசனுக்கும், கருப்பையா, கங்காதரன் ஆகியோருக்கும் மது வாங்கப் பணம் கொடுப்பது தொடர்பாக காலையில் எழுந்த வாய்த் தகராறு மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் சிரஞ்சீவி, அவரின் சகோதரர் முருகேசன், மற்றொரு முருகேசன் ஆகியோர் சேர்ந்து கருப்பையா மற்றும் கங்காதரனைக் கத்தியால் குத்தியுள்ளனர்.

பின்னர், மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் கருப்பையா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கங்காதரன், கத்திக்குத்து காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், சிரஞ்சீவி, முருகேசன், மற்றொரு முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

சிகிச்சை பெற்றுவரும் கங்காதரன்
சிகிச்சை பெற்றுவரும் கங்காதரன்

மூவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து பேரும் வேறு வேறு கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், பெயின்டிங் தொழில்ரீதியாக ஒன்றாக வேலை செய்து, ஒருவருக்கு ஒருவர், நட்புடன் பழகிவந்த நிலையில், ’மது’வால் அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு வாய்த் தகராறு, கைகலப்பாக மாறி அதிக போதையால் தாக்கியதில் ஒருவரின் உயிரையே பறித்துவிட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு