Published:Updated:

திருத்தணி: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை - வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் மோகன்

திருத்தணியில் திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கட்சியினரிடைய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை - வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடந்த கொடூரம்

திருத்தணியில் திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கட்சியினரிடைய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் மோகன்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரக்கோணம் சாலை ஜெ.ஜெ.நகர், கனகதுர்க்கை அம்மன் தெருவில் குடியிருந்தவர் மோகன் (37). தி.மு.க பிரமுகர். இவர் நேற்றிரவு புல்லட் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் பகுதியில் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மோகனை வழி மறித்தனர். பின்னர் அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மோகனை சரமாரியாக வெட்டினர். இதில் மோகன் நிலைத்தடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

மருத்துவமனை முன் குவிந்த உறவினர்கள், கட்சியினர்
மருத்துவமனை முன் குவிந்த உறவினர்கள், கட்சியினர்

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அந்த பகுதி வழியாக ஒரு ஆட்டோ வந்தது. தி.மு.க பிரமுகர் மோகன், உயிருக்குப் போராடுவதைப் பார்த்த ஆட்டோ டிரைவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின்னர் மோகனை ஆட்டோவில் ஏற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து திருத்தணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் போலீஸார் சென்றனர். இதனிடையே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த மோகன், உயிரிழந்தார். மோகன் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் கட்சியினர், உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீஸார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், கொலை செய்தவர்களைப் பிடிக்க திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்தபோது அங்கிருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மோகனுக்கு எதிரிகள் யாராவது இருந்தார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட மோகன் தி.மு.க.வில் உள்ளார். இவர் திருத்தணியில் உள்ள தி.மு.க முக்கிய பிரமுகர்களின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தார். அவர்களின் அலுவலகத்தில்தான் பெரும்பாலும் இருப்பார். அதனால், காவல் துறையினர், அரசு அதிகாரிகளுடன் நல்ல நட்பு இருந்து வந்தது. கட்சியில் கூட மோகனுக்கு பதவி கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மோகனின் சடலம்
மோகனின் சடலம்

இந்தச் சூழலில்தான் மோகன், கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். மோகனுக்கு கல்பனா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மோகனின் முகத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் விழுந்ததால் ஒரு பகுதி சிதைக்கப்பட்டிருந்தது. இதுதவிர கழுத்து, கை உள்ளிட்ட இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது. அதனால், மோகனை பின்தொடர்ந்து வந்த கும்பல்தான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது" என்றனர்.

தி.மு.க பிரமுகர் மோகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.