Published:Updated:

பேரச் சொன்னாலே பயப்படணும்டா! - காஞ்சியின் அடுத்த தாதா ஆகிறாரா லோகேஸ்வரி?

லோகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
லோகேஸ்வரி

அவளை யார் எதிர்த்தாலும் முதலில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவாள். அது ஒத்துவரவில்லை யென்றால், பணம், மாது போன்ற பலவீனங்களைக் காட்டி வீழ்த்தும் முயற்சி நடக்கும்.

பேரச் சொன்னாலே பயப்படணும்டா! - காஞ்சியின் அடுத்த தாதா ஆகிறாரா லோகேஸ்வரி?

அவளை யார் எதிர்த்தாலும் முதலில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவாள். அது ஒத்துவரவில்லை யென்றால், பணம், மாது போன்ற பலவீனங்களைக் காட்டி வீழ்த்தும் முயற்சி நடக்கும்.

Published:Updated:
லோகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
லோகேஸ்வரி

`பெரிய ஆள்’ எனப் பெயர் வாங்குவதற்காக நன்கொடை கொடுப்பவர்களை, அன்னதானம் போடுபவர்களை, விழாக்களை முன்னின்று நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். புது பாணியில் தி.மு.க கவுன்சிலரைப் பச்சைப் படுகொலை செய்து, பிணத்தை நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார் லோகேஸ்வரி!

சமரசத்துக்கு அழைத்து கொலை!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் கவுன்சிலராக இருந்தவர் சதீஷ். 31 வயதான அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தி.மு.க-காரர். கேபிள் டி.வி தொழில் நடத்திவந்த சதீஷ், கவுன்சிலரான பிறகு பொது விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி யிருக்கிறார். நடுவீரப் பட்டு பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து வந்தார். இது அந்தத் தொழில் செய்த லோகேஸ்வரி (எ) எஸ்தர் என்ற பெண் ரெளடிக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பேரச் சொன்னாலே பயப்படணும்டா! - காஞ்சியின் அடுத்த தாதா ஆகிறாரா லோகேஸ்வரி?

“அடிக்கடி அவரது விஷயத்தில் தலையிட்டதால், ‘பேசித் தீர்த்துக்கலாம்’ என்று செப்டம்பர் 19-ம் தேதி சதீஷை, லோகேஸ்வரியின் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். அதை நம்பி, சதீஷ் தனியாக லோகேஸ்வரி வீட்டுக்குச் சென்றிருக் கிறார். வீட்டில்வைத்து, சதீஷை லோகேஸ்வரி தலைமையிலான டீம் வெட்டிக் கொன்றிருக்கிறது. தகவல் கொடுத்தபோதே காவல்துறையினர் லோகேஸ்வரிமீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் சதீஷை இழந்திருக்க மாட்டோம்” என்கிறார்கள் சதீஷின் நண்பர்கள்.

இது குறித்து சோமங்கலம் போலீஸாரிடம் பேசினோம். ``சதீஷ் கொலை வழக்கில், லோகேஸ்வரி, நவமணி, சதீஷ், கோழி என்கிற அன்பு, ராஜேஷ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் பிறகுதான் கவுன்சிலர் கொலைக்கான காரணம் தெரியவரும். சரணடைந்துள்ள நவமணி மீது ஏற்கெனவே டி.வி நிருபர் மோசஸ் கொலை வழக்கும் இருக்கிறது’’ என்றனர்.

‘கவுன்சிலர்’ சதீஷ்
‘கவுன்சிலர்’ சதீஷ்

யார் இந்த லோகேஸ்வரி?

`காஞ்சிபுரம் ரௌடி’ என்றாலே பிரபல டான் ஸ்ரீதர்தான் நினைவுக்கு வருவான். தனக்குக் கீழ் ஒரு டீமை வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி திருவள்ளூர், சென்னை யிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தவன், ஒரு கட்டத்தில் போலீஸ் என்கவுன்ட்டருக்கு பயந்து, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றான். 2017-ம் ஆண்டு கம்போடியாவில் அவன் தற்கொலை செய்துகொண்டான்.

அதன் பிறகு காஞ்சிபுரத்தில் அவன் இடத்தைப் பிடிக்க ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாசலமும் (தணிகா), ஸ்ரீதரின் டிரைவர் தினேஷும் முயன்றனர். இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்க, குறுக்குவழியில் அந்த இடத்தை நோக்கி நகர்பவள்தான் லோகேஸ்வரி. தன்னுடைய கணவரைக் கொலைசெய்துவிட்டு கட்சிப் பிரமுகர் ஒருவரின் நிழலில் ஒதுங்கிய இவள்மீது, கொலை, பாலியல் தொழில், கள்ளச் சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன. தன்னுடைய பாதுகாப்புக்காக பெரிய, சிறிய ரௌடிகளுடன் ‘நெருக்கமாக’வும் இருந்திருக்கிறாள்.

சோமங்கலம் காவல் நிலையத்தில் இவளை அடிக்கடி பார்க்கலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். தனது ஸ்கூட்டியில் சென்று, போலீஸாருக்கு மாமூல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாள். கூடவே, மூன்று நான்கு பாடிகார்டுகளும் பைக்கில் பின் தொடர்வார்களாம். போலீஸுடன் காட்டிய நெருக்கத்தால், யார் இவள்மீது புகார் கொடுத்தா லும், இவளுக்குத் தகவல் வந்துவிடும். அவளது மிரட்டல், கட்டப்பஞ்சாயத்தில் போலீஸுக்கும் பங்கு உண்டு என்கிறார்கள்.

 நவமணி, சதீஷ், அன்பு, ராஜேஷ்
நவமணி, சதீஷ், அன்பு, ராஜேஷ்

“பயப்படணும்டா!”

நடுவீரப்பட்டு ஊராட்சியில் தன் சமூகவிரோதச் செயல்களைக் காவல்துறையினர் மட்டுமல்லாமல் யாருமே தட்டிக் கேட்காத நிலையில், கவுன்சிலர் சதீஷ் துணிந்து புகார் கொடுத்ததால், பேச்சு வார்த்தை என்ற பெயரில் அவரை வீட்டுக்கே வரவழைத்திருக்கிறாள் லோகேஸ்வரி. அவர் வந்தவுடன் கதவைச் சாத்திய லோகேஸ்வரி & கோ, தலையிலேயே அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலைசெய்ததோடு, ரத்தம் காய்வதற்குள் அவரது உடலை இழுத்து தெருவில் வீசியிருக்கின்றனர். “நம்ம பேரச் சொன்னாலே எல்லாரும் பயப்படணும்டா” என்று கூட்டாளி களிடம் சொல்வாளாம் லோகேஸ்வரி. அப்படி பயத்தை உருவாக்கவே இந்தக் கொலையைச் செய்திருக்கிறாள் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

“அவளை யார் எதிர்த்தாலும் முதலில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவாள். அது ஒத்துவரவில்லை யென்றால், பணம், மாது போன்ற பலவீனங்களைக் காட்டி வீழ்த்தும் முயற்சி நடக்கும். அதற்கும் படியவில்லை என்றால் வெட்டு, குத்து. இதுதான் தாதா லோகேஸ்வரியின் ஸ்டைல். கவுன்சிலர் சதீஷ் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது” என்கிறது போலீஸ் வட்டாரம்!

ஒரு நாளில் உருவானவள் அல்ல லோகேஸ்வரி. ஆரம்பத்திலேயே அடக்கியிருந்தால் இவளைப் போன்றவர்கள் தலையெடுத்திருக்க மாட்டார்கள்!