Published:Updated:

`உயிருக்கு பயந்தே சமாதானம் ஆனேன்' - ஊராட்சி உறுப்பினர் Vs ஒன்றிய கவுன்சிலரின் கணவர் - நடந்தது என்ன?

விஜராகவன் (எ) சக்திவேல், முருகவேல்

காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினரை, போலீஸாரின் முன்னிலையிலேயே தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர் தரப்பினர் தாக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`உயிருக்கு பயந்தே சமாதானம் ஆனேன்' - ஊராட்சி உறுப்பினர் Vs ஒன்றிய கவுன்சிலரின் கணவர் - நடந்தது என்ன?

காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினரை, போலீஸாரின் முன்னிலையிலேயே தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர் தரப்பினர் தாக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விஜராகவன் (எ) சக்திவேல், முருகவேல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினராக இருந்துவருகிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முருகவேல். இந்நிலையில், நேற்று முன்தினம் (17.12.2022) அந்தப் பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சாலைப் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியை அமைக்க முற்பட்டிருக்கிறார். இதை முருகவேல் எதிர்த்த நிலையில், அந்தப் பணியைச் செய்வதற்கான பொருள்களைக் கொண்டுவந்திருந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவர் விஜயராகவன் என்பவர் இவரைத் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு இரு தரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் முருகவேல், ஆரோவில் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் சென்றிருக்கிறார். இதை அறிந்த விஜயராகவன் தரப்பினர், காவல் நிலையத்துக்குள் புகுந்து முருகவேலை போலீஸார் முன்னிலையிலேயே தாக்க முற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆரோவில் காவல் நிலையம்
ஆரோவில் காவல் நிலையம்

எனவே, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் முருகவேலிடம் பேசினோம். "எனக்குச் சொந்த கிராமம் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட மொரட்டாண்டி. நான் 7-து வார்டு உறுப்பினராக இருக்கிறேன். சம்பவத்தன்று மதியம், நான் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, என் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தாசில்தார் ஒருவர் அவருடைய வீட்டின் முன்பு, சாலையின் நடுவே கழிவுநீர்த் தொட்டி அமைப்பதற்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார். அதைப் பார்த்த நான், 'என்ன பண்ணுறீங்க' என்றேன். கழிவுநீர்த் தொட்டி அமைக்கப்போவதாகவும், அது குறித்துப் பேச வேண்டியவர்களிடம் பேசிவிட்டதாகவும் கூறினார்.

'ஓர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, நீங்களே இப்படிச் சாலையில் கழிவுநீர்த் தொட்டியை அமைக்கலாமா... இது அநாகரிகம்' என்றேன். உடனே, 8 - 12-வது வார்டு வரையிலான ஒன்றிய கவுன்சிலர் காமாட்சியின் கணவர் விஜயராகவனுக்கு போன் பண்ணி தகவல் சொன்னார் தாசில்தார். அங்கிருந்த ஜே.சி.பி வாகனம் மற்றும் பொருள்கள் அனைத்தும் விஜயராகவனுடையவைதான். அங்கு வந்த விஜயராகவன், ஜே.சி.பி ஓட்டநரிடம்... "யார் வேலையை நிறுத்தியது?" என கேட்டுவிட்டு, "நீ யார் இங்கு பள்ளம் எடுக்கக் கூடாதென்று சொல்வதற்கு?" என்று என்னைக் கேட்டார். 'நடுத்தெருவில் பள்ளம் எடுக்கப்படுகிறது. நீங்களும் இதே ஊர்க்காரர்தானே... நீங்களும் கேளுங்கள். இவரைப் பார்த்து நாளை ஊரில் உள்ளவர்களும் இப்படித்தான் செய்வார்கள். இதை தயவுசெய்து நிறுத்துங்கள். நான் இந்த வார்டு உறுப்பினர், அதனால்தான் கேட்கிறேன்' என்றேன் விஜயராகவனிடம்.

ஆரோவில் காவல் நிலையத்தில் முருகவேல் தரப்பினர்
ஆரோவில் காவல் நிலையத்தில் முருகவேல் தரப்பினர்

உடனே, "இவன் என்ன பண்ணுறான்னு பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு, ஜே.சி.பி ஓட்டுநரிடம் கூறி பள்ளம் எடுத்தார் விஜயராகவன். நான் ஜே.சி பி ஓட்டுநரை நிறுத்தச் சொன்னேன். உடனே, என் சட்டையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்த விஜயராகவன், அவருடன் இருந்தவர்களை வைத்து என்னை அடித்தார். "உன்னுடைய தராதரம் என்ன... என்னுடைய தராதரம் என்ன... நீ என்கிட்ட சரிக்குச் சரியாக நின்னு பேசுற..." என்று என்னைப் பார்த்துக் கேட்டார். இவர், அந்த வார்டுக்கு சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கூடக் கிடையாது. புவனேஸ்வரி ராமதாஸ் என்பவர்தான் 1 முதல் 7 வார்டு வரையிலான ஒன்றிய கவுன்சிலர். ஆனால், இவர் அதே கிராமத்தைச் (மொரட்டாண்டி) சேர்ந்தவர் என்பதால் இப்படி ஆதிக்கம் செலுத்துகிறார். 

இந்த நிலையில்தான் என்னுடைய அண்ணன் பையன் ஜேம்ஸுக்கு நான் தகவல் சொல்ல, அவர் வந்து இதைக் கேட்டார். அப்போது அவரையும் விஜயராகவன் கீழே தள்ளிவிட, இருவருக்குமிடையே கைகலப்பு ஆகிவிட்டது. உடனே, ஆரோவில் காவல் நிலையத்துக்குஒ புகார் கொடுக்க நாங்கள் சென்றோம். அங்கு 20 பேர் தடி, கம்புடன் வந்தனர். அவர்களில் நான்கு பேர் காவல் நிலையத்துக்கு உள்ளே வந்து எங்களை அடிக்க முற்பட்டனர். விஜயராகவனின் மச்சான், காவலரின் டேபிள்மீது இருந்த ஒரு வெயிட்டை எடுத்து என்னை அடித்தார். உடனே போலீஸார் என்னை ஆய்வாளர் அறையில் வைத்து பூட்டிவிட்டனர். உடனே ஜன்னல் பகுதியில் வந்து, அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். உடனே கோட்டகுப்பம் டி.எஸ்.பி., பஞ்சாயத்துத் தலைவர், எங்கள் பகுதி ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் அங்கு வந்துவிட்டனர். இருதரப்பிலும் ஆட்கள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். "ஒரே ஊர்க்காரங்க... சமாதானமாகப் போங்க..." என்று ஒரு நெருக்கடி கொடுத்து, என்னை சமாதானத்துக்கு உட்படுத்தினார்கள். 

ஆரோவில் காவல் நிலைய வாயிலில் ஜேம்ஸ்
ஆரோவில் காவல் நிலைய வாயிலில் ஜேம்ஸ்
உயிருக்கு பயந்து, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பயந்துதான் நான் சமாதானம் கொடுத்தேன். எனக்கு அதில் முழுக்க முழுக்க உடன்பாடே கிடையாது. போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே வந்து தாக்க வருகிறார்கள் எனும்போது, எனக்கு ஏது பாதுகாப்பு?

அதனால்தான் சமாதானத்துக்கு எழுதிக் கொடுத்தேன். எனவே போலீஸும் அப்போது வழக்கு பதியவில்லை. இந்நிலையில், இரவு 11 மணிபோல விஜயராகவனின் தரப்பினர் என்னுடைய உறவினரான ஜேம்ஸ் வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்து சென்றிருந்தனர். 

மேலும், நேற்று காலையில் சுமார் 20 அடியாட்களுடன் வந்த விஜயராகவன் தரப்பினர், ஜேம்ஸ் உள்ளிட்ட அவரது வீட்டார் ஐந்து பேரைச் சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் இப்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பலத்த காயமடைந்த ஜேம்ஸை ஆட்டோ மூலமாக ஆரோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க விஜயராகவனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை. அவர், விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

ஆரோவில் காவல் நிலையம்
ஆரோவில் காவல் நிலையம்

இந்நிலையில், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்புகொண்டு பேசினோம். "நேற்று நாங்கள் ஏதும் சமரசத்தில் ஈடுபடவில்லை. அவர்களுடைய உறவுக்காரர்கள்தான் பேசிக்கொண்டார்கள். முருகவேல் தரப்பினர் தற்போது புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.