Published:Updated:

தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு!

கே.கே.நகர் தனசேகரன்
கே.கே.நகர் தனசேகரன்

பொன்வேலுவும் வேறொரு நபரும் இன்று மதியம் 3 மணியளவில் தனசேகரனின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர் அலுவலகத்துக்குள் அரிவாளுடன் வந்ததால், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அமுதா சத்தம்போட்டுக் கத்தியிருக்கிறார்.

தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரனை இன்று அலுவலகத்தில்வைத்தே அரிவாளால் வெட்டியிருக்கிறது ஒரு கும்பல். `தனசேகரன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் கணவர்தான் இப்படியொரு செயலில் ஈடுபட்டிருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு விவகாரங்கள் இருக்கின்றன' என்கின்றனர் அந்தப் பகுதியினர்.

சென்னை கே.கே.நகரில் வசித்துவருகிறார் தனசேகரன். தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினரான இவர், கடந்த இரு தேர்தல்களிலும் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், சென்னை தெற்கு மாவட்டத்தில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்தநிலையில், இன்று மாலை அவரது அலுவலகத்தில்வைத்தே சிலர் அரிவாளால் அவரை வெட்டியிருக்கும் சம்பவம், தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`எதனால் விட்டேன்னு சொல்லவா?!' - ஸ்டாலினைக் கொதிக்கவைத்த கே.கே.நகர் தனசேகரன்

`என்ன நடந்தது?’ என விசாரித்தோம், `` தனசேகரனின் அலுவலகத்தில் அமுதா என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்துவருகிறார். அவருடைய கணவர் பொன்வேல். அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளுக்குள் மோதலும் ஏற்பட்டது.

இந்தநிலையில், பொன்வேலுவும் வேறொரு நபரும் இன்று மதியம் 3 மணியளவில் தனசேகரனின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலுவலகத்துக்குள் அரிவாளுடன் வந்ததால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அமுதா சத்தம்போட்டுக் கத்தியிருக்கிறார். அந்தநேரத்தில் மதிய உணவை முடித்துவிட்டு, மாடியிலுள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார் தனசேகரன். அமுதாவின் அலறல் சத்தம் கேட்டுக் கீழே வந்தவர், ஆயுதங்களுடன் இருந்த பொன்வேல் தரப்பினரைத் தடுத்திருக்கிறார். இந்த மோதலில் தனசேகரனின் கையில் பலத்த வெட்டு விழுந்தது. அவரது கை விரலே துண்டிக்கும் அளவுக்கு வெட்டு விழுந்தது. அமுதாவின் தலையிலும் பலத்த வெட்டு விழுந்தது. அந்தப் பெண்ணின் நிலை சீரியஸாக இருந்ததால், கே.கே.நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தனசேகரனை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Vikatan

இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூடியதால் பொன்வேல் தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். கே.கே.நகர் பகுதியைச் பொறுத்தவரையில் தனசேகரன் மிகுந்த செல்வாக்கானவர். பல்வேறு பஞ்சாயத்துகளை நடத்துவதாக அவர் மீது புகார்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட நபரை அலுவலகத்தில் புகுந்த ஒரு நபர் வெட்டியிருப்பதைக் கட்சிக்காரர்களால் நம்ப முடியவில்லை. இதன் பின்னணி என்பது குறித்து போலீஸார்தான் விசாரணை நடத்த வேண்டும்" என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகவைத்து கே.கே.நகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அரிவாள் வெட்டுக்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றித் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு