செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியில் முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான், கடந்த 21-ம் தேதி காரில் செல்லும்போது ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தாக தகவல் வெளியானது. அதுதொடர்பாக அவரின் மகன் ஷாநவாஸ் என்பவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``தன்னுடைய அப்பா, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தில் துணைத் தலைவராக இருக்கிறார். கடந்த 21-ம் தேதி தன்னுடைய சித்தப்பாவின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் Tn 06 aa 1112 என்ற பதிவு எண் கொண்ட காரில் செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு டோல்கெட்டைத் தாண்டி வரும்போது என்னுடைய அப்பாவுக்கு (மஸ்தான்) நெஞ்சுவி ஏற்பட்டதாகவும் உடனடியாக கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் இம்ரான்பாஷா தெரிவித்தார்.

மருத்துவமனையில் என்னுடைய அப்பா மஸ்தானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மஸ்தான் இறப்பில் சந்தேகம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெயராஜ், தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், மஸ்தானுடன் காரில் பயணித்த அவரின் மருமகன் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தனர். அப்போது மஸ்தான், ஹார்ட் அட்டாக்கில்தான் இறந்தார் என்ற தகவலை இம்ரான்பாஷா தெரிவித்தார். இந்தச் சூழலில் மஸ்தானின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் போலீஸாரிடம் அளித்த தகவலில் மஸ்தான் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.
அதனால் இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகளை தனிப்படை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். மேலும் மஸ்தான் மரணம் குறித்து இம்ரான் பாஷாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தன்று மஸ்தானின் காரைப் பின்தொடர்ந்து இன்னொரு காரும் சென்றது தெரியவந்தது. அப்போது திடீரென இரண்டு கார்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுவது தெரியவந்தது. அதனால் அந்தப்பகுதியில் இருந்த செல்போன்களின் சிக்னலை போலீஸார் கண்காணித்தனர். அப்போது மஸ்தான் பயணித்த காரில் இம்ரான் பாஷாவைத் தவிர மேலும் இரண்டு பேர் காரில் சென்றது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்தபோது இம்ரான் பாஷாவின் சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது என்றும் அவரின் நண்பர் நஷீர் எனத் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது ரூ.15 லட்சம் ரூபாய் பணத்துக்காக மஸ்தானை இம்ரான் பாஷா கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திமுக முன்னாள் எம்.பி மஸ்தானிடம் இம்ரான் பாஷா சிறுக சிறுக என 15 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கியிருக்கிறார். தன்னுடைய மகன் ஷாநவாஸின் திருமணச் செலவுக்காக மஸ்தான், கடனாக கொடுத்த பணத்தை மருமகன் இம்ரான் பாஷாவிடம் கேட்டிருக்கிறார். பணத்தை திரும்ப கொடுக்க விரும்பாத இம்ரான் பாஷா, முன்னாள் எம்.பி மஸ்தானைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தன்னுடைய உறவினர்கள் சுல்தான் அகமது, அவனின் நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன், ஆகியோருடன் சேர்ந்து சம்பவத்தன்று ஃபைனான்ஸியர் ஒருவரிடம் பணம் வாங்கித் தருவதாகக் கூறி மஸ்தானைக் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது மஸ்தானின் காரை இம்ரான் பாஷா ஓட்டியிருக்கிறார். அந்தக் காரில் தமீம், நஷீர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள். மஸ்தான் சென்ற காரைப் பின்தொடர்ந்து இன்னொரு சொகுசு காரும் சென்றிருக்கிறது. அதில் தௌபிக் அகமதுவும் லோகேஸ்வரனும் வந்திருக்கிறார்கள். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய இம்ரான் பாஷா, முன்னாள் எம்.பி மஸ்தானின் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த நஷீருக்கும் தமீமுக்கும் கண்ணால் சிக்னல் கொடுத்திருக்கிறான். உடனே நஷீர், மஸ்தானின் கைகளைப் பின்புறமாக பிடித்திருக்கிறான். அடுத்து மஸ்தானின் வாய், மூக்கை சுல்தான் பிடித்து அவரை மூச்சுவிடாமல் அழுத்தியிருக்கிறான். அப்போது மற்றொரு காரில் வந்த தௌபிக், லோகேஸ்வரும் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து மஸ்தான் சத்தம் போடமிலிருக்க கர்சிப்பை அவரின் வாய்க்குள் திணித்திருக்கிறார்கள். அதனால் மூச்சுத்திணறி மஸ்தான் உயிரிழந்தும், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது போல நடித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 5 பேரையும் கைது செய்ததுடன் கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.