Published:Updated:

போலீஸின் 24 மணி நேர கண்காணிப்பில் சீனியம்மாள்!- உமா மகேஸ்வரி கொலையில் அடுத்த நடவடிக்கை என்ன?

பி.ஆண்டனிராஜ்

முன்னாள் மேயர் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடத்திவரும் போலீஸார், தி.மு.க-வைச் சேர்ந்த சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சீனியம்மாளை போலீஸ் கண்காணிப்பில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கொலையான முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி
கொலையான முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாத நிலையில், கிடைத்த மிகச்சிறிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

தி.மு.க பிரமுகர் சீனியம்மாள்
தி.மு.க பிரமுகர் சீனியம்மாள்

இந்தக் கொலைச் சம்பவத்தில் தி.மு.க-வின் ஆதிதிராவிட நலக்குழுச் செயலாளரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார், அவரைக் கைது செய்துள்ளனர். கைதான கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தில், தன் தாயாருக்குக் கட்சியில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளை உமா மகேஸ்வரி தட்டிப் பறித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலை வழக்கில் கார்த்திகேயனை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணையின் முக்கியக் கட்டத்தை எட்டிய நிலையில் திடீரென சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொலையைக் கார்த்திகேயன் தனியாகச் செய்ததாகச் சொன்ன போதிலும் இதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், மாநகரக் காவல்துறையினர் ஒரு சிலரை வழக்கிலிருந்து விடுவித்ததால் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனியம்மாள்
சீனியம்மாள்

இந்த நிலையில், கொலைச் சம்பவத்துக்குத் தூண்டுகோலாக சீனியம்மாள் இருந்தாரா என்கிற கோணத்தில் விசாரணையை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். முதலில் கார்த்திகேயனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார், அதன் தொடர்ச்சியாக சீனியம்மாளுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் முடிவு செய்துள்ளனர். தற்போது மதுரையில் உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை எடுத்துவரும் சீனியம்மாளை போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறார்கள். `அவர் இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்தார் என்பது தெரியவருமானால் கைது செய்யத் தயங்க மாட்டோம்' என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.