Published:Updated:

கூலிப்படை, பேரம், கண்காணிப்பு!- நெல்லை முன்னாள் மேயர் கொலைவழக்கில் சீனியம்மாள் சிக்கிய பின்னணி

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட தி.மு.க பெண் பிரமுகர் சீனியம்மாளும் அவரது கணவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Seeniammal
Seeniammal ( L.Rajendran )

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர், கடந்த ஜூலை 23-ம் தேதி கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டனர். ஒரே வீட்டில் மூவரும் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தி.மு.க-வின் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளரான சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார்.

Seeniammmal
Seeniammmal

இந்த வழக்கின் பின்னணியில், உள்கட்சி மோதல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால், வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், கொலைச் சம்பவத்துக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டிக் கொடுத்ததாக சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

உமா மகேஸ்வரியைக் கொன்றது யார்?- துப்பு கிடைக்காமல் திணறும் நெல்லை போலீஸ்!

தி.மு.க-வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தி.மு.க-வைச் சேர்ந்தவரான சீனியம்மாள் மீது தொடக்கத்திலேயே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இருமுறை அவரிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால், போதுமான ஆதாரம் கிடைக்காததால் அவரைக் கண்காணித்துவந்தார்கள்.

Karthik Raja
Karthik Raja

அரசியலில் சீனியரான சீனியம்மாளின் வளர்ச்சிக்கு உமா மகேஸ்வரி முட்டுக்கட்டையாக இருந்ததாக, சீனியம்மாளின் குடும்பத்தினர் கருதினார்கள். தற்போது, முதுமை மற்றும் நோய் காரணமாகத் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறார். தனது தாயின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால், உமா மகேஸ்வரியை கொலை செய்ததாக கார்த்திக் ராஜா வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதனிடையே, இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபடுவதற்கு கார்த்திக் ராஜாவுக்குத் தூண்டுதலாக இருந்தது, சீனியம்மாள் மற்றும் தன்னாசி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சீனியம்மாளின் சொந்த ஊரைச் சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்தவரிடம் தொடக்கத்தில் பேரம் பேசப்பட்டிருக்கிறது. வேறொரு வழக்கு தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையின்போது, அந்தக் குற்றவாளி இதைத் தெரிவித்துள்ளார்.

Thannasi in CBCID office for interrogation
Thannasi in CBCID office for interrogation

உமா மகேஸ்வரியைக் கொல்வதற்கு கூலிப்படையை அணுக முடியாததால், சீனியம்மாள்-தன்னாசி தம்பதியர், தங்கள் மகன் கார்த்திக் ராஜா மூலமாகக் காரியத்தை முடித்துக் கொண்டுள்ளனர் என்கின்றனர் போலீஸார். இதுதொடர்பான ஆதாரங்களை எல்லாம் சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள்.

உள்கட்சி மோதல் காரணமாக, முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கில் தி.மு.க பிரமுகர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

DMK announcement
DMK announcement

இதனிடையே, தி.மு.க-வின் ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளரான சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.