ஈரோடு, சம்பத் நகரை அடுத்த நியூ டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பூர்ணிமா (30) என்ற மனைவியும், இனியன் (10) என்ற மகனும் உள்ளனர். பூர்ணிமா எம்.எஸ். முடித்து விட்டு அகமதாபாத்தில் தங்கி மருத்துவப் பயிற்சி பெற்று வருகிறார். சக்திவேலின் தந்தை சண்முகசுந்தரம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். சண்முகசுந்தரத்தின் மனைவி ஜெயலட்சுமியும், சண்முகசுந்தரமும் சக்திவேலின் இல்லத்தில் பேரனுடன் வசித்து வந்தனர்.
பேரன் இனியனுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஜெயலட்சுமியின் சொந்த ஊரான விருதுநகருக்கு, தாத்தா சண்முகசுந்தரத்துடன் சென்று விட்டார்.
இதனால் தனிமையில் சக்திவேல் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அதிகப்படியான மயக்க மருந்தை ட்ரிப்ஸ் மருந்துடன் கலந்து தனக்கு தானே செலுத்திக் கொண்டு உறங்கச் சென்றிருக்கிறார். காலையில் விருதுநகரில் இருந்து தந்தை சண்முகசுந்தரமும், தாயார் ஜெயலட்சுமியும் சக்திவேலின் தொலைபேசியை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாக தொலைபேசி மணி ஒலித்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த சண்முகசுந்தரம், சக்திவேல் பணிபுரிந்து வந்த தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டார்.

அவர்களும் பலமுறை சக்திவேல் தொலைபேசியை தொடர்பு கொண்ட போதும், அவர் போனை எடுக்கவில்லை. இதனால், ஊழியர் ஒருவர் சக்திவேலின் இல்லத்துக்கு நேரில் சென்று கதவைத் தட்டியும் கதவு திறக்காததால் போலீஸார் துணையுடன் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, டாக்டர் சக்திவேல் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் ஆய்வாளர் சண்முகம் நம்மிடம் கூறுகையில், ``டாக்டர் சக்திவேல் எழுதியுள்ள கடிதத்தில், என்னுடைய சாவுக்கு நானே காரணம். எனக்கு மனது சரியில்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்” என்றார். எனினும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.