சென்னையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் துணை கமிஷனர் ஷ்யாம்ளா தேவியைச் சில தினங்களுக்கு முன் சந்தித்து தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர்மல்கக் கூறினார். இதையடுத்து பெண் மருத்துவரின் புகார், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம், பெண் மருத்துவரிடம் விசாரணை நடத்தினார். அதன்பேரில் பெண் மருத்துவருக்குச் சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக எம்.டெக் பட்டதாரியான பிரபாகரனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
புகாரளித்த பெண் மருத்துவரிடம் பேசினோம்.``என்னுடைய அப்பா மும்பையில் பிசினஸ் செய்து வந்ததால் அங்கேயே செட்டிலாகிவிட்டோம். நான் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பிறகு எனக்கு வரன் தேடினர். எனக்கும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் கடந்த 7.2.2020-ம் தேதி திருமணம் நடந்தது. பிரபாகரன், ஐஐடி-யில் வேலை பார்ப்பதால் கைநிறைய சம்பளம் எனக் கூறி அவரின் வீட்டினர் வரதட்சணையாக பெண்ணுக்கு (எனக்கு) 101 சவரன் தங்க நகைகள், மாப்பிள்ளைக்கு 5 சவரனில் செயின், 3 சவரனில் கை செயின், வைரம் பதித்த மோதிரம், 5 லட்சம் ரூபாய், 5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரத்திலான கட்டில், பீரோ, சீர்வரிசைப் பொருள்கள், டொயோட்டா கார், சென்னையில் வீடு ஆகியவற்றைக் கேட்டனர். வீடு தவிர மாப்பிள்ளை வீட்டினர் கேட்ட அனைத்தையும் வரதட்சணையாகக் கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வாடகை வீட்டில் குடியமர்ந்தோம். தினமும் காலை 8 மணிக்கு பிரபாகரன், சென்னை ஐஐடி-க்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்வார். பிறகு இரவு 11:30 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். குடித்துவிட்டு வீட்டுக்கு பிரபாகரன் வந்தால், என்னைக் கேவலமாக திட்டி, அடித்து துன்புறுத்துவார். திருமணத்துக்குப் பிறகு ஒரு நாள்கூட நான் நிம்மதியாகத் தூங்கியதில்லை. வார்த்தைகளால் சொல்ல முடியாத பாலியல் சீண்டலில் ஈடுபடுவார். அதை நான் தட்டிக் கேட்டால் என்னை அடித்து உதைத்தார். மேலும் அவர், ஒரு நாள்கூட கணவராக என்னிடம் நடந்துகொண்டதில்லை. சந்தோஷமாக என்னுடன் அவர் பேசியதில்லை. வெளியில் எங்கும் அழைத்துச் சென்றதில்லை. எனக்கு நடந்த கொடுமைகளை என்னுடைய அம்மா, அப்பா என யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
கடந்த 2022-ம் ஆண்டு, பிரப்வரி மாதம் 11-ம் தேதி என்னுடைய தோழி ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்ல புறப்பட்டேன். அப்போது கட்டிலுக்கு அடியில் நான் வைத்திருந்த 105 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த நான், நகைகள் குறித்து பிரபாகரனிடம் கேட்டேன். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால் நகைகள் திருட்டுப்போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவரிடம் நான் கூறியபோதுதான், நகைகளை எடுத்து அடகுவைத்து அந்தப் பணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்திருப்பதாக பிரபாகரன் கூறினார். இதையடுத்து பிரபாகரனின் நடவடிக்கை மீது எனக்கு சந்தேகம் வந்தது. அதனால், அவரின் லேப்டாப்பை கடந்த 14.3.2022-ம் தேதி ஓப்பன் செய்து பார்த்தேன். அதில் ஒரு பெண்ணுடன் பிரபாகரனுக்கு பழக்கம் இருந்த தகவல் தெரியவந்தது.

பிரபாகரனுடன் தொடர்பில் இருக்கும் பெண், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி படித்த தகவல் கிடைத்ததும் அவர் குறித்து விசாரித்தபோது இன்னொரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அந்தப் பெண்ணும், பிரபாகரனும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நான், பிரபாகரனிடம் `எனக்கு ஏன் துரோகம் செய்தீர்கள்...’ எனக் கேட்டு சண்டை போட்டேன். ஆனால் அவரோ என்னை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையில், பிரபாகரன் வேலை பார்த்ததாகக் கூறிய சென்னை ஐஐடி-க்கு சென்று விசாரித்தபோது அவர் அங்கு வேலை பார்க்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இப்படி என்னை திட்டமிட்டு ஏமாற்றிய பிரபாகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகாரளித்தேன்.
பிரபாகரனோடு சேர்ந்து என்னை ஏமாற்றிய அவரின் குடும்பத்தினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரபாகரன் கைது சம்பவத்துக்குப் பிறகு என்னைச் சிலர் பின்தொடர்ந்து வருகின்றனர். அதனால் பாதுகாப்பு கேட்டு அசோக் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறேன். பிரபாகரனோடு சேர்ந்து வாழும் அந்தப் பெண் நினைத்திருந்தால் என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவள் செய்யவில்லை. அதனால் என்னுடைய வாழ்க்கையில் சொல்ல முடியாத தொல்லைகளை அனுபவித்துவிட்டேன். அந்தக் காயங்களை வாழ்க்கையில் மறக்க முடியவில்லை" என்றார் கண்ணீர்மல்க.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஷ்யாம்ளா தேவியிடம் பேசினோம். ``பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் அவரின் கணவர் பிரபாகரன் உட்பட ஆறு பேர் மீது ஏழு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து பிரபாகரனைக் கைதுசெய்திருக்கிறோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம். இந்த வழக்கில் பெண் மருத்துவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். யாராவது பாதிக்கப்பட்டால் ஹெல்ப் லைன் நம்பர்களை தொடர்புகொள்ளலாம்" என்றார்.