Published:Updated:

`மன அழுத்தம்;கடைசியாக மனைவியிடம் பேசினார்!’ -குமரியில் திருமணமான 9 மாதத்தில் அரசு மருத்துவர் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் லாலு கிருஷ்ணா
தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் லாலு கிருஷ்ணா

கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு டாக்டர் லாலு கிருஷ்ணா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட பெற்றோர் கதறினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் லாலூ கிருஷ்ணா (28). மருத்துவப் படிப்பை முடித்த இவர் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆர்யா என்பவருக்கும் சுமார் 9 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஆர்யா எம்.டி மேற்படிப்புக்காக அஹமதாபாத் சென்றுவிட்டார். லாலூ கிருஷ்ணா தாய் தந்தையருடன் தக்கலையில் வசித்துவந்தார். தினமும் மருத்துவமனைக்குச் சென்றுவரும் லாலூ கிருஷ்ணா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தன் மனைவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பின்னர் ஓய்வெடுப்பதாகக் கூறி அறைக்குச் சென்ற அவர், இரவு 8 மணிக்கு மேலாகியும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் பெற்றோர் அறைக் கதவைத் தட்டி லாலூ கிருஷ்ணாவை அழைத்துள்ளனர். அறையிலிருந்து எந்தச் சத்தமும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு லாலு கிருஷ்ணா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்ட பெற்றோர் கதறினர்.

மனைவி ஆர்யாவுடன் டாக்டர் லாலு கிருஷ்ணா
மனைவி ஆர்யாவுடன் டாக்டர் லாலு கிருஷ்ணா

இதுகுறித்து லாலு கிருஷ்ணாவின் தந்தை முருகன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் வயிறு வலி காரணமாக டாக்டர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர் லாலூ கிருஷ்ணாவின் மனைவியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினால் முழுத் தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. திருமணமான 9 மாதத்தில் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தக்கலைப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு