Published:Updated:

`பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா?' - குழந்தைகள் கண்முன்னே வெட்டிகொல்லப்பட்ட தாய்!

வனிதா
வனிதா

`இப்போது பிள்ளைகள் மூன்று பேரும் அநாதையாக நின்று அழுதுகொண்டிருக்கின்றனர். கொஞ்சம்கூட யோசிக்காமல் பெரியவர்கள் இது போன்ற தவறுகளைச் செய்வதால் பிள்ளைகள்தாம் பாதிக்கப்படுகின்றனர்.'

தஞ்சாவூரில் பிள்ளைகள் கண்முன்னே அம்மா மற்றும் வீட்டில் இருந்த ஆண் ஒருவரையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். கொலைக்கும்பலில் பெண் ஒருவரும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வனிதா. இவரின் கணவர் காமராஜ். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காமராஜ் சுமார் 15 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் வனிதாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைத்தது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், வனிதாவுக்கு கனகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகியுள்ளனர். இதனால் கனகராஜ், வனிதா வீட்டுக்கு அடிக்கடி வந்துசெல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில் வனிதாவின் சகோதரி மகன் பிரகாஷிடம் வனிதா இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட கனகராஜ்
கொலை செய்யப்பட்ட கனகராஜ்

இதில் ஒன்றரை லட்சத்தை வனிதா திருப்பித் தந்துவிட்டார். பாக்கி பணத்தை பிரகாஷ் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார். இதனால் இரு தரப்புக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கனகராஜ் வனிதாவுக்கு ஆதரவாக பிரகாஷிடம் சென்று பஞ்சாயத்து செய்திருக்கிறார். அப்போது பிரகாஷ், `நான் கொடுத்த பணத்தைக் கேட்கிறேன். நீ யாரு இடையில் இதைக் கேட்பதற்கு' எனக் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சொத்துத் தகராறில் விழுப்புரம் தி.மு.க பிரமுகர் கொலை! -10 மணிநேரத்தில் கொலையாளிகளை வளைத்த போலீஸ்

பின்னர், வனிதா பணம் கடன் வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றுவதாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பிரகாஷ். இந்தப் புகார் விசாரணையில் இருந்துவரும் நிலையில் இன்று காலை பிரகாஷ், அவர் நண்பர் சூர்யா மற்றும் மகேஷ்வரி என்ற பெண் ஆகிய மூன்று பேரும் இரு இரண்டு சக்கர வாகனத்தில் வனிதாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது கனகராஜும் அங்கே இருந்திருக்கிறார்.

சம்பவ இடத்தில்
சம்பவ இடத்தில்

`என்னிடம் வாங்கிய பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா' என பிரகாஷ் கேட்க இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் மூன்று பேரும் எழுந்துவிட `அம்மா சண்டை போடாதீங்க' என வனிதாவிடம் கெஞ்சியுள்ளனர். ஆனாலும் பிரகாஷ் தரப்பும் வனிதா தரப்பும் கடுமையாக வார்த்தைகளால் மோதிக்கொண்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் பிரகாஷ் மற்றும் உடன் வந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வனிதா மற்றும் கனகராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் இரண்டு பேருமே வீட்டுக்குள்ளேயே இறந்துவிட பிரகாஷ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

பிரகாஷ்
பிரகாஷ்

குழந்தைகள் மூன்று பேரும் தங்கள் கண் முன்னாலேயே வெட்டி அம்மா கொலை செய்யப்பட்டதைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். ``கொடுத்த பணத்தைத் தராததால் பணத்தைக் கேட்டு பலமுறை பிரகாஷ் வனிதாவைத் தாக்கியிருக்கிறார். மேலும், முன்பே கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதை போலீஸ் முறையாக விசாரித்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

இப்போது பிள்ளைகள் மூன்று பேரும் அநாதையாக நின்று அழுது கொண்டிருக்கின்றனர். கொஞ்சம்கூட யோசிக்காமல் பெரியவர்கள் இது போன்ற தவறுகளைச் செய்வதால் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். இனி அந்தப் பிள்ளைகள் மூன்று பேரின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைச்சாதான் பாவமாக இருக்கு" என அங்கிருந்தவர் ஒருவர் தெரிவித்தார்.

வனிதா
வனிதா

இது குறித்து தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை பகுதியில் கடந்த 10 தினங்களில் மட்டும் 5 பேருக்கும் மேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு