தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தேவ விநாயகர்கோயில் தெருவில் வசிப்பவர் ஐயப்பன். அவரின் வீட்டின் அருகே அவரின் உறவினரான செல்லத்துரை என்பவர் வசித்துவருகிறார். இருவருக்குமிடையே குடும்பச் சொத்து தொடர்பான நிலப்பிரச்னை இருந்துவந்திருக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிக்கடி சண்டை நடந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இருவரும் குடித்திருந்த நிலையில், நிலப்பிரச்னை தொடர்பான மோதல் ஏற்பட்டிருக்கிறது. மது போதையில் இருவரும் இருந்ததால், ஆத்திரமடைந்த செல்லத்துரை, தன்னிடமிருந்த அரிவாளால் ஐயப்பனை வெட்டியிருக்கிறார். அதில் பலத்த காயமடைந்த ஐயப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நேரத்தில் ஐயப்பனின் மகன் கருப்பசாமி என்பவர் அங்கு வந்திருக்கிறார். தன்னுடைய தந்தை உயிரிழந்தைப் பார்த்து பதறிய அவர், அங்கு உடலில் ரத்தம் தெறித்த நிலையில் இருந்த செல்லத்துரை மீது ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது.
ஐயப்பன் கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் அவரின் மகன் கருப்பசாமி, தன் எதிரே நின்ற செல்லத்துரையின் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மது போதையில் உறவினர்களுக்கிடையே நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்ட போலீஸார் உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். செல்லத்துரையை கத்தியால் குத்திக் கொலைசெய்த கருப்பசாமியை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.