Published:Updated:

ஆப்கன் டு குஜராத்: `ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்; சென்னையில் சிக்கிய தம்பதி!'

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், ஆப்கனிலிருந்து ஈரான் வழியாக கடத்திவரப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், கடத்தலில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த தம்பதியை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகிலேயே ஹெராயின், அபின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடாக தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் கருதப்படுகிறது. இவ்வகையான போதைப்பொருள்கள் உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மூலப்பொருளான அபின் பாப்பி செடி ஆப்கனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தற்போது, அந்த நாட்டைக் கைப்பற்றியிருக்கும் தாலிபன்கள் அபின் பாப்பி செடி சாகுபடியை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக வெளி உலகத்துக்குக் கூறிக்கொண்டிருக்கும்போதிலும், அங்கு பாப்பி செடி கொண்டு போதைப்பொருள்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. பல்வேறு நாடுகளில் இந்தச் செடிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஆப்கன் கள்ளச்சந்தையில் இந்த போதைப்பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

அந்தவகையில், இந்தியாவுக்கும் ஆப்கானிலிருந்தே ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கிடைக்கப்பெறுகின்றன. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பல் ஒன்றின் மூலமாக இரண்டு கன்டெய்னர்களில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் கடந்த வாரம், இரானிலிருந்து குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்த குறிப்பிட்ட கப்பலை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முந்த்ரா துறைமுகம்
முந்த்ரா துறைமுகம்

அதில், சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அதிகாரிகள் போதைப்பொருள்களைக் கைப்பற்றி, அந்தக் கப்பலில் இருந்த இரண்டு ஆப்கனியர்களைக் கைதுசெய்தனர். அப்போது அந்த ஹெராயின் பெட்டிகள் மீது 'ஆஷி டிரேடிங் கம்பெனி', சத்தியநாராயணபுரம், விஜயவாடா என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, அந்த முகவரியில் ஆய்வு மேற்கொள்ள, புலனாய்வு அதிகாரிகள் விஜயவாடா விரைந்தனர். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அதிகாரிகள் விசாரித்ததில், அந்தப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த வீடு பூட்டிக்கிடந்திருக்கிறது. மேற்படி, அந்த வீட்டில் முகப்பவுடர் வியாபாரம் செய்துவரும் காக்கிநாடாவைச் சேர்ந்த கணவன் - மனைவி, சுதாகர் - வைஷாலி என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதேபோல், ஹெராயின் கடத்தலில் தொடர்புடைய அந்தத் தம்பதி தற்போது சென்னையில் வசித்துவருவதாகவும் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சென்னை விரைந்த புலனாய்வு அதிகாரிகள் சென்னை போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்தத் தம்பதி குறித்த பல தகவல்கள் வெளியாகின. வெளியுலகுக்கு முகத்தில் பூசும் பவுடர் இறக்குமதி செய்து விற்பனை செய்துவருவதைப்போல் காட்டிக்கொண்டு, சுதாகர், தன் மனைவி வைஷாலியின் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் பெற்று ஜி.எஸ்.டி பதிவு செய்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டடுவந்தது தெரியவந்தது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த இந்தத் தம்பதி சென்னையில், கொளப்பாக்கம் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கி, ஆந்திரா முகவரி கொண்டு கடத்தல் தொழில் செய்துவந்ததும் அம்பலமானது. இதைத் தொடர்ந்து சென்னை விரைந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் பதுங்கியிருந்த சுதாகர் மற்றும் அவரின் மனைவி வைஷாலி இருவரையும் நேற்று முன்தினம் அதிரடியாகக் கைதுசெய்தனர்.

டி.ஆர்.ஐ  அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
டி.ஆர்.ஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

அதையடுத்து, குஜராத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை விசாரித்த அதிகாரிகள், இருவரையும் நேற்று குஜராத்தின் புஜ் நகரிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏற்கெனவே, சென்னை தம்பதியைத் தவிர்த்து ஆப்கனைச் சேர்ந்த இருவர் குஜராத் புலனாய்வு அதிகாரிகளின் பிடியில் இருக்கும் நிலையில், இந்த ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த சில முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகளால் சந்தேகிக்கப்படுகிறது. பல வருடங்களாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் இந்தத் தம்பதி, அவற்றை ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலையை மட்டும்தான் பார்க்கிறார்கள் என்றும், இதற்குப் பின்னால் பெரிய கும்பல் ஒன்று இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

3,000 கிலோ; ரூ.21,000 கோடி மதிப்பு! - குஜராத்தில் சிக்கிய ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருள்

இந்தநிலையில், இந்தக் கடத்தல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அதானி துறைமுக நிர்வாகம், "முந்த்ரா துறைமுகம் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதிலுள்ள கன்டெய்னர்கள் அதிகாரிகளால்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத் திறக்கும் அதிகாரமும் அவர்களுக்கே இருக்கிறது. அதில் எங்களுடைய பணி எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அதானி குழுமத்தைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டுவரும் செய்திகள் தவறானவை," என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு