Published:Updated:

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதியின் மகன் காரிலிருந்து தங்க நகையைத் திருடிய டிரைவர்! -சிக்கியது எப்படி?

டிரைவர் லூர்திராஜ்
டிரைவர் லூர்திராஜ்

சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் மகன் காரிலிருந்து தங்க நகைகளைத் திருடிய டிரைவரை போலீஸார் கைது செய்து நகைகளையும் மீட்டிருக்கின்றனர். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் சரவணன் 40 நிமிடங்களிலேயே திறம்பட விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

சென்னை பெருங்குடி காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மகா பிரபு (40). இவர் பிசினஸ் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சேலம், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு தன்னுடைய காரில் மகாபிரபு சென்றார். அப்போது காரை டிரைவர் லூர்திராஜ், ஓட்டிச் சென்றார். வீடு திரும்பிய பிறகு காரின் பின்புறத்தில் வைத்திருந்த 8 சவரன் தங்க காசு மாலையை மகாபிரபு தேடிப் பார்த்தார். அப்போது காரில் தங்க காசு மாலை இல்லை. அதனால் அதிர்ச்சியடைந்த மகாபிரபு கார் முழுவதும் தேடிபார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

தங்க நகை
தங்க நகை

பின்னர் அதுகுறித்து துரைப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனிடம் மகாபிரபு கடந்த 26-ம் தேதி காலையில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மகாபிரபுவிடம் விசாரித்தனர். அப்போது அவர், காரில் ஊருக்குச் சென்றுவிட்டு வந்த தகவலைத் தெரிவித்தார். உடனடியாக போலீஸார் மகாபிரபு குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கார் டிரைவர் லூர்திராஜ், தங்க நகைகள் வைத்திருந்த பேக்கை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

`8 வருட தொடர் திருட்டு; பூட்டியிருக்கும் கிராமத்து வீடுதான் டார்கெட்’ -பலே திருடன் சிக்கியது எப்படி?

அதனால் லூர்திராஜிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், நான் திருடவே இல்லை என சத்தியம் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் லூர்திராஜின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு சோதனை செய்த போது மகாபிரபுவின் காரிலிருந்து திருடப்பட்ட 8 சவரன் தங்க காசு மாலை இருந்தது. இதையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீஸார், லூர்திராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், `` மகாபிரபு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்கு தெரிந்த டிரைவர் லூர்திராஜை அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 23-ம் தேதி ஊருக்குச் சென்றபோது காரை லூர்திராஜ் ஓட்டியிருக்கிறார். அப்போது காரில் நகையை வைப்பதை பார்த்த லூர்திராஜ் அதை திருடியிருக்கிறார்.

கைது
கைது

ஊருக்கு சென்றுவிட்டு திரும்பியபோதுதான் தங்க நகை மாயமாகியிருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் 13 ஆண்டுகளாக தெரிந்த லூர்திராஜ் மீதான நம்பிக்கையால் அவர் மீது மகாபிரபுவுக்கு சந்தேகம் வரவில்லை. இந்தச் சமயத்தில்தான் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோதுதான் லூர்திராஜ், தங்க நகை இருந்த பேக்கை எடுத்த காட்சி பதிவாகியிருந்தது. அதன்பிறகும் லூர்திராஜிடம் மகாபிரபு கேட்ட போது அவர் நகையை திருடவில்லை என்றே கூறியிருக்கிறார். இதையடுத்துதான் எங்களுக்கு புகார் வந்ததும் லூர்திராஜிடம் விசாரித்து 40 நிமிடங்களில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். லூர்தி ராஜ் மீது ஏற்கெனவே பெண் ஒருவர் கொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது" என்றார்.

புகார் கொடுத்த ஒரு மணி நேரத்துக்குள் திறம்பட வழக்கை விசாரித்து குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான டீமுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், துணை கமிஷனர் விக்ரமன் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு