சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பவுனு. இவர், சித்தாள் வேலை செய்துவருகிறார். இவரின் கணவர் ஏழுமலை, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். பவுனுவின் மகன் விஜயன் (29). இவர் கால்டாக்ஸி டிரைவராக வேலை பார்த்துவந்தார். விஜயன், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். இந்த நிலையில் விஜயனுக்கும் அனிதாவுக்கும் மே மாதம் முதல் வாரம் திருமணம் நடந்தது.

கூட்டுக்குடும்பமாக பவுனும், அவரின் மகனும், மருமகளும் குடியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 28.5.2022-ம் தேதி காலை 6 மணிக்கு பவுனு, வீட்டில் சமையல் செய்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் விஜயனும் அனிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வெளியில் சென்ற விஜயன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர் அனிதாவுடன் விஜயன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் மனவேதனையடைந்த அனிதா, பவுனுவின் மூத்த மகள் கீதா வீட்டுக்குச் சென்று விவரத்தைத் தெரிவித்துள்ளார். பின்னர் அனிதா அங்கேயே இருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து மனைவியை அழைத்துச் செல்ல குடிபோதையில் விஜயனும் கீதா வீட்டுக்குச் சென்றார். அப்போது விஜயனிடம், `இப்படி குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டால் என் வீட்டுப் பக்கம் வாரதே' என்று கீதா சத்தம் போட்டிருக்கிறார். அதனால் கோபத்தோடு விஜயன் அக்காள் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு அனிதாவும் விஜயனைத் தேடி மாமியார் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் விஜயன் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அனிதா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் விஜயனை மீட்டுள்ளார். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. உடனடியாக விஜயன் தூக்கில் தொங்கிய தகவலை பவுனுக்கு அனிதா போனில் தகவல் தெரிவித்தார்.

அதனால் அவசரமாக வீட்டுக்கு வந்த பவுனு, மகன் விஜயனிடம் `ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டபடியே அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்த விஜயன் மீண்டும் கண்ணை மூடியிருக்கிறார். அதன் பிறகு விஜயன் கண்விழிக்கவில்லை. இதையடுத்து விஜயனை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். வீட்டுக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயனைப் பரிசோதித்தபோது விஜயன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பவுனு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகராஜ் வழக்கு பதிவுசெய்து, விஜயனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். தொடர்ந்து விஜயனின் மரணம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமணமாகி 22 நாள்களுக்குள் டிரைவர் விஜயன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.