சென்னை: திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட நட்பு! - விபரீத முடிவை எடுத்த ஜோடி

கணவர், குழந்தைகளைவிட்டு பிரிந்து சென்ற மனைவி, `நான் மருந்து சாப்பிட்டுவிட்டேன், என்னைக் கடைசியா வந்து பார்த்துட்டுப் போங்க’ என்று கணவரிடம் போனில் கூறினார்.
சென்னை ஆவடி வீராபுரம், புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (33). கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆனந்தனும், அவருடன் பைக்கில் வந்த இளம்பெண்ணும் ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்தின் அருகில் திடீரென வாந்தி எடுத்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரிடமும் விசாரித்தபோது தாங்கள் விஷம் குடித்ததாகக் கூறினர். உடனடியாக இருவரையும் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த ஆனந்தன், ஆவடி டேங்க் பேட்டரி சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ``நான் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் பகுதியிலிலேயே வசித்த ஆஷா (30) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

எங்களுக்கு 12 வயதில் மகளும், 11 வயதில் மகனும் இருக்கிறார்கள். நான் டிரைவராக வேலை பார்த்துவருகிறேன். தற்போது அரக்கம்பாக்கத்திலுள்ள செங்கல் சூளையில் வண்டி ஓட்டி வந்தேன். கடந்த மூன்று மாதங்களாக லாரியில் செங்கல் இறக்கியபோது மோரை அண்ணாநகரைச் சேர்ந்த 27 வயதான சுந்தரி என்ற பெண்ணுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் பழக்கம் வீட்டுக்கு தெரிந்து, என் மனைவி என்னிடம் கேட்க ஆரம்பித்தார். அதனால் நானும் சுந்தரியும் கடந்த 4-ம் தேதி காலை செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று, பின்னர் வேலை முடிந்து இருவரும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு பைக்கில் ஆத்தூர், பாலூர், வாலாஜாபாத், படூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று வேலை கேட்டோம். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை.
எல்லா இடங்களிலும் பொங்கல் முடிந்து வருமாறு கூறினார்கள். அதனால் என்ன செய்வதென்று யோசித்தபோது சுந்தரி, தன்னுடைய கணவர் கண்ணனுக்கு போன் செய்தார். அப்போது, `தான் மருந்து சாப்பிட்டு விட்டதாகவும் தன்னைக் கடைசியாக வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறும்’ கூறினார். இதையடுத்து நானும் சுந்தரியும் வாலாஜாபாத்திலிருந்து பைக்கில் கிளம்பிவந்தோம். அப்போது கிஷ்கிந்தா அருகில் வந்து பைக்கை நிறுத்திவிட்டு அருகில் இருந்த அரளிச் செடியிலிருந்து அரளிக் காய்களைப் பறித்தோம். வீட்டுக்குச் சென்றால் என்னையும் சுந்தரியையும் சேர்ந்து வாழவிட மாட்டார்கள் என்று கருதி, ஐந்தாறு அரளிக் காய்களை நான் முதலில் சாப்பிட்டேன். அதைப் பார்த்த சுந்தரியும் இரண்டு அரளிக் காய்களைச் சாப்பிட்டார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பினோம். இதற்கிடையில் சுந்தரியின் கணவரும் உறவினர்களும் தாமரைப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் காத்திருந்தனர். அந்த வழியாக நாங்கள் இருவரும் சென்றபோது என் மனைவி ஆஷா, சுந்தரியின் கணவர் கண்ணன் மற்றும் உறவினர்கள் எங்களை மடக்கிப் பிடித்தனர். சுந்தரியைக் காணவில்லை என அவரின் குடும்பத்தினர் ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், எங்கள் இருவரையும் அங்கு செல்லுமாறு உறவினர்கள் கூறினர். அதனால் நானும் சுந்தரியும் வெள்ளானூர் கிருஷ்ணா கால்வாய் பாலம் வழியாக ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையம் அருகே வந்தபோது நானும் சுந்தரியும் வாந்தியெடுத்தோம். அதைப் பார்த்த என் மனைவி ஆஷா என்னவென்று கேட்டார். நானும் சுந்தரியும் அரளி விதை சாப்பிட்டதைக் கூறியதும் எங்கள் இருவரையும் ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்" என்று கூறினார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் உயிரிழந்தார். சுந்தரி சிகிச்சை பெற்றுவருகிறார். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட நட்பால் ஜோடி விஷம் குடித்ததால், இரண்டு குடும்பங்களும் சோகத்தில் மூழ்கியிருக்கின்றன.