Published:Updated:

சென்னை: வீட்டில் தனியே இருந்த கணவர் தற்கொலை! -தீபாவளிக்கு ஊருக்குச் சென்று திரும்பிய மனைவி அதிர்ச்சி

தீபாவளிக்குச் சொந்த ஊருக்கு மனைவி சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்தியூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். டிரைவர். இவரின் மனைவி பானுபிரியா (26). இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். விஜயகுமாரும், பானுபிரியாவும் வேலை தேடி சென்னைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர். சென்னை வேளச்சேரி, ராம்நகரில் வாடகைக்குக் குடியிருந்தனர். பானுபிரியா, வீட்டு வேலை செய்துவருகிறார். விஜயகுமார், கார் டிரைவராக வேலை பார்த்துவந்தார்.

தற்கொலை
தற்கொலை

குழந்தைகளை விஜயகுமாரின் பெற்றோர், கள்ளக்குறிச்சியில் வளர்த்துவந்தனர். தீபாவளியையொட்டி பானுபிரியா, குழந்தைகளைப் பார்க்க ஊருக்குச் சென்றார். விடுமுறை இல்லாததால் விஜயகுமார் ஊருக்குச் செல்லவில்லை. சென்னையில் தனியாக இருந்தார். கடந்த 5-ம் தேதி பானுபிரியா, சென்னைக்குத் திரும்பி வந்தார். கணவருக்கு பானுபிரியா போன் செய்து ஊருக்கு வரும் தகவலைத் தெரிவித்தபோது வேளச்சேரியிலுள்ள உறவினர் வீட்டுக்கு செல்லும்படி விஜயகுமார் கூறினார். அதன்படி பானுபிரியா அங்கு சென்றார்.

பிறகு பானுபிரியா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. உடனே கதவை தட்டிப் பார்த்தார். பதில் வராததால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே எட்டிப் பார்த்தபோது விஜயகுமார் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் பானுபிரியா புகாரளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விஜயகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார் அவரின் மரணம் குறித்து விசாரித்துவருகின்றனர்.

பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொண்ட ஐ.ஜி சிவன் அருளின் மனைவி; என்ன நடந்தது?
 தற்கொலை
தற்கொலை
Representational Image

பானுபிரியா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `` நான் 5.11.2021-ம் தேதி சொந்த ஊரிலிருந்து சென்னைக்குப் புறப்படும் தகவலை விஜயகுமாருக்கு போனில் தெரிவித்தேன். உடனே அவர், வேளச்சேரியிலுள்ள அவரின் தங்கை வீட்டுக்கு வரும்படி கூறினார். அதனால் கள்ளக்குறிச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இரவு 10 மணிக்கு வந்தேன். பிறகு அவரின் தங்கை தனம் வீட்டுக்குச் சென்றபோது அங்கு விஜயகுமார் இல்லை. உடனே எனது நாத்தனாரின் மகன் விக்னேஷை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால் கதவைத் தட்டியும் விஜயகுமார் திறக்கவில்லை. அவருக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

அவர் ஏற்கெனவே மது அருந்தியிருந்ததாக நாத்தனார் என்னிடம் தெரிவித்தார். அதனால் அவர் தூங்கியிருப்பார் எனக்கருதி நான் நாத்தனார் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலையில் வந்து கதவை தட்டிபார்த்தபோது திறக்காததால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தேன். அப்போது விஜயகுமார், மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே, என் கணவர் விஜயகுமார் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தீபாவளிக்கு மனைவி ஊருக்குச் சென்ற நேரத்தில் தனியாக வீட்டிலிருந்த கணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு