Published:Updated:

``தாயின் தவறான நட்பு; ஊரடங்கில் டிரைவரைக் கொலை செய்த மகன்" -மாங்காடு பகுதியில் நடந்த கொடூரம்

தாயுடன் டிரைவர் பழகுவதைக் கண்டித்த மகன், ஊரடங்கு சமயத்தில் அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார்.

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). தனியார் நிறுவன டிரைவர். இவருக்கு அபிராமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், கடந்த 26-ம் தேதி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள செங்கல் சூளை பகுதிக்கு நண்பருடன் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ரஞ்சித்குமாரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரஞ்சித்குமாரின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்தக் கும்பலிடம் ரஞ்சித்குமார் வசமாக சிக்கிக்கொண்டார்.

`பணத்துக்காக நடந்த கொலை இது' -திருமணமான 7 மாதத்தில் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கொலை
கொலை
மாதிரிப் படம்

தப்பி ஓடிய ரஞ்சித்குமாரின் நண்பர், ஊரில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து, மாங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாங்காடு போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சித்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போரூர் உதவி கமிஷனர் சம்பத், மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பொற்பாதம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல். இவரின் அம்மாவுக்கும் ரஞ்சித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. ரஞ்சித்குமாரின் பழக்கத்தை விட்டுவிடும்படி தன் தாயிடம் விமல் அடிக்கடி கூறிவந்துள்ளார். இதன்காரணமாக அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

கொலை வழக்கில் கைதான பிரேம்
கொலை வழக்கில் கைதான பிரேம்

தற்போது ஊரடங்கு காரணமாக விமல் வீட்டிலேயே இருந்ததால் அவரின் அம்மாவை ரஞ்சித்குமாரால் சந்திக்க முடியவில்லை. நிலையில் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தித்துள்ளனர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட விமல், ரஞ்சித்குமாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக ரஞ்சித்குமாரை தனியாக வீட்டை விட்டு வெளியில் அழைத்துவரும்படி நண்பர்களிடம் கூறினார். ரஞ்சித்குமார், தன்னுடைய நண்பருடன் செங்கல் சூளைக்கு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது சிகரெட் பிடிப்பது தொடர்பாக ரஞ்சித்குமாருடன் விமல் மற்றும் அவரின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்தச் சமயத்தில் விமல் மற்றும் அவரின் நண்பர்கள் பிரேம் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இந்த மோதலில் ரஞ்சித்குமாரின் நண்பர் தப்பிவிட்டார். பின்னர் அங்கிருந்து மூன்று பேரும் தப்பி திருமழிசை பகுதியில் பதுங்கியிருந்தனர். அவர்களைப் பிடித்து விமல், பிரேமை சிறையிலும் சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்துள்ளோம்" என்றனர்.

கொலை
கொலை

ரஞ்சித்குமார், மணல் கடத்தலைத் தடுக்க இன்பார்மராக செயல்பட்டதால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் முதலில் வெளியானது. ஆனால், அவர் உடலில் இருந்த காயங்களை வைத்து, பெண் விவகாரம் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அந்தக் கோணத்தில் விசாரித்தபோதுதான் விமல் மற்றும் அவரின் நண்பர்கள் சிக்கினர். விமலும் கொலைக்கான காரணத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மாங்காடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு