Published:Updated:

சிக்கிய அப்பாவிகள்; தப்பிய திமிங்கிலங்கள்; கூவிக்கூவி விற்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ்! - பகீர் பின்னணி

திருத்தணியில் தகுதியில்லாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுத்த சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டிரைவிங் லைசென்ஸ் விற்கப்பட்ட திருத்தணி ஆர்.டி.ஓ ஆபீஸ்
டிரைவிங் லைசென்ஸ் விற்கப்பட்ட திருத்தணி ஆர்.டி.ஓ ஆபீஸ்

திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் திருத்தணியில் பகுதி நேர அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு லைசென்ஸ், வாகன தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ) கட்டுப்பாட்டில் மோட்டார் வாகன ஆய்வாளராக அமிதா பானு என்பவர் கடந்த ஓராண்டாகப் பணியாற்றிவந்தார்.

திருத்தணி ஆர்.டி.ஓ ஆபீஸ்
திருத்தணி ஆர்.டி.ஓ ஆபீஸ்

இந்தநிலையில், மதுரையில் முறைகேடு செய்து ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்த ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது திருத்தணியில் பணம் கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய தகவலைத் தெரிவித்தார். அதுதொடர்பாக விசாரிக்கும்படி திருவள்ளூர் ஆர்.டி.ஓ ஜெயபாஸ்கரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணை முடிந்து விரிவான அறிக்கையை போக்குவரத்துத்துறை கமிஷனரிடம் திருவள்ளூர் ஆர்.டி.ஓ ஜெயபாஸ்கரன் சமர்ப்பித்தார். கமிஷனரின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனிடமும் ஜெயபாஸ்கரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஒரிஜினல் லைசென்ஸ் முறைகேடு குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானுவின் லாகின் ஐ.டி, பாஸ்வேர்டு மூலம் இந்த லைசென்ஸ் விநியோகிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

லைசென்ஸ் வழக்கில் கைதானவர்கள்
லைசென்ஸ் வழக்கில் கைதானவர்கள்

ஒரிஜினல் லைசென்ஸ் முறைகேடு தொடர்பாக திருத்தணி செந்தமிழ்நகரைச் சேர்ந்த ராஜா என்கிற ராபர்ட் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர், திருத்தணி பகுதி நேர ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்துவந்தார். அவர் அளித்த தகவலின்படி ராஜாவின் கூட்டாளிகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் அணைக்கரை தாளவேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25), சக்திவேல் (26) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைதான மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ராஜா அளித்த வாக்குமூலத்தில் ``நான், திருத்தணியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்ஸி படித்தேன். தனியார் நிறுவனம் மூலம் திருத்தணி பகுதி நேர ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆபரேட்டர் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது அங்கு பணியாற்றிய மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவரின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை ரகசியமாகத் தெரிந்துகொண்டேன். அதன்மூலம் சிலருக்கு ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்களைக் கொடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராபர்ட் என்கிற ராஜா
கைது செய்யப்பட்ட ராபர்ட் என்கிற ராஜா

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``திருத்தணி பகுதி நேர ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ராஜா என்கிற ராபர்ட்தான் தகுதியில்லாதவர்களுக்கு லைசென்ஸ் விநியோகித்ததில் மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார். அவர் மூலம் லைசென்ஸ் பெற்றவர்கள் யார், யார் என்ற தகவலை சேகரித்துவருகிறோம். லைசென்ஸ் மட்டுமல்லாமல் இதர மோசடியிலும் ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் ஈடுபட்ட தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரணையும் நடந்துவருகிறது" என்றார்.

இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ ஜெயபாஸ்கரனிடம் பேசினோம். ``திருத்தணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. திருத்தணிக்கு மோட்டார் வாகன ஆய்வாளராக ராஜராஜேஸ்வரி என்பவரை பணியமர்த்தியுள்ளோம்" என்றார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானு
மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானு

வட்டார போக்குவரத்து துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``முன்பெல்லாம் டிரைவிங் லைசென்ஸுக்கு போட்டோ எடுக்கும் பணி, எல்காட் நிறுவனம் மூலம் நடந்துவந்தது. தற்போது தனியார் நிறுவனத்தின் மூலம் இந்தப் பணிகள் நடந்துவருகின்றன. அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்தான் ராஜா என்கிற ராபர்ட். இவர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். திருத்தணி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துவருகின்றன. ஒப்பந்தப் பணியில் ஈடுபடுவோர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நம்பிக்கை அடிப்படையில் தங்களின் லாகின் மற்றும் பாஸ்வேர்டுகளை கொடுப்பதே இதுபோன்ற தவறுகள் நடக்க காரணமாக அமைந்துவிடுகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானுவின் லாகின் மற்றும் பாஸ்வேர்டை தெரிந்துகொண்டு ராபர்ட் என்கிற ராஜா தகுதியில்லாதவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு லைசென்ஸ் கொடுத்துள்ளார். எனவே, மீண்டும் அரசே போட்டோ எடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். தனியாரிடம் ஒப்படைப்பதால்தான் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன" என்றார்.

சிக்கிய அப்பாவிகள், தப்பிய திமிங்கிலங்கள்

டிரைவிங் லைசென்ஸ் விவகாரத்தில் திருத்தணி பகுதி நேர ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றிய ராஜா, இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக அவரின் அம்மா கிரிஜா நம்மிடம் தெரிவித்தார். மேலும் அவர், `என் மகன் அப்பாவி. அவன் அதிகமாக சம்பாதித்திருந்தால் நாங்கள் ஏன் இந்தக் குடிசை வீட்டில் வாழ வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாதம் 2,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றான். கடந்த இரண்டு மாதங்களாகத்தான் 8,000 ரூபாய் சம்பளம் வாங்கினான்'' என்று கண்கலங்கினார்.

கிரிஜா
கிரிஜா

``ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் இந்த முறைகேடுகளுக்குப் பின்னணியில் சிலர் உள்ளனர். அவர்கள்தாம் இணையதளம் மூலம் ஒரிஜினல் லைசென்ஸ்களை பணத்துக்கு கூவிக்கூவி விற்றுள்ளனர். இதற்கென தனி நெட்வொர்க் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நெட்வொர்க் கும்பல் பின்னணியில் ஆள்பலமும் அரசியல் செல்வாக்கும் உள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை அப்பாவிகள் சிக்கிக்கொண்டுள்ளனர். ஆனால், திமிங்கிலங்கள் தப்பித்துவிட்டன'' என்று சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.