ராமேஸ்வரம் கடற்கரை வழியாக இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன்பேரில் கடந்த நான்கு நாள்களாக வெளியூர்களிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் போலீஸார் தீவிர சோதனை செய்துவந்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போகலூர் சுங்கச்சாவடி அருகே ராமநாதபுரம் நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் வெள்ளை கற்கண்டு போன்றும், எண்ணை போன்ற திரவமும் கொண்டுவரப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கின்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் இருவரையும் பிடித்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தனசேகரன், பாக்யராஜ் என்பதும், போதைப்பொருள் கடத்தல் கும்பலால் ராமேஸ்வரம் அருகே வேதாளை கடற்கரை கிராமத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொடுத்து அனுப்பிய போதைப்பொருள்கள் அவை என்பதும் தெரியவந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், கடத்தப்பட்ட போதைப்பொருள்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆய்வுசெய்ய சென்னையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அதில் கற்கண்டு போன்று காணப்பட்ட 38 கிலோ போதைப்பொருள் 'கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்' என்பதும், 50 கிலோ எண்ணை போன்ற இருந்த பொருள் 'கஞ்சா ஆயில்' என்பதும் இதன் மதிப்பு 160 கோடி எனவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தொடர்ந்து நேற்று காலை முதல் மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்ட இருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், கடத்தல் கும்பலின் சில முக்கியப் புள்ளிகள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் போதைப்பொருள்களான கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன், கஞ்சா ஆயிலை டிரங்க் பெட்டிக்குள் வைத்து, சீலிட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் சமீபத்தில் பிடிபட்ட போதைப்பொருள்களின் மதிப்பைவிட தற்போது பிடிபட்டிருக்கும் இந்த போதைப்பொருள்களின் மதிப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.250 கோடி வரை இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்குத் தங்கம், போதைப்பொருள், மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து கடத்தப்பட்டுவருகின்றன. சமீபத்தில் தி.மு.க கவுன்சிலர்களால் வேதாளை கிராமத்தின் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்திக்கொண்டு செல்ல முயன்ற மர்ம பவுடரை கடற்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல் கடந்த வாரம் தங்கம் கடத்திச் செல்ல முயன்றவர்கள் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.