Published:Updated:

`ஆத்துக்குள்ள விழுந்தா எப்படியிருக்கும்?'- கதறிய குழந்தைகளை ஆற்றில் வீசிய கொடூர தந்தை

கும்பகோணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை ஆற்றுக்கு அழைத்துவந்த தந்தை, `ஆற்றுக்குள் விழுந்தா எப்படியிருக்கும்' எனக் கேட்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாவண்யா
லாவண்யா

கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் கட்டடக் கூலி வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு ஷோபனா, லாவண்யா, ஸ்ரீமதி என மூன்று பெண் குழந்தைகளும் ஹரீஸ், குணசேகரன் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சம்பளம் வாங்கும் பணத்தை முழுமையாக வீட்டுக்குத் தராமல் பாதிப் பணத்தை மதுவுக்குச் செலவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் பாண்டி. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் ரேணுகாதேவி கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். 5 குழந்தைகள் வேறு இருப்பதால் அவர்கள் ஆசைப்பட்டதையும் வாங்கித் தர முடியாமல் கவலைப்பட்டு வந்திருக்கிறார். குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிரமங்களால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீமதி
ஸ்ரீமதி

இதேபோல் நேற்று மாலையும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ரேணுகாதேவியின் சகோதரர் பாண்டியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி தன்னுடைய இரு மகள்களான லாவண்யா, ஸ்ரீமதி ஆகியோரை அழைத்துக்கொண்டு அருகே உள்ள அரசலாற்றுப் பாலத்துக்கு வந்துள்ளார். அப்போது லாவண்யா, `ஏம்பா எங்களை ஆற்றுக்கு அழைத்து வந்திருக்க...' எனக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே திடீரென இரண்டு பேரையும் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்.

ஆற்றுக்குள் விழுந்த லாவண்யா தத்தளித்தபடி கூச்சலிட்டுக் கத்தவே படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் லாவண்யாவைக் காப்பாற்றினர். அந்த இடத்தைவிட்டுச் சென்ற பாண்டி, ரேணுகாவிடம் இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் வீசிவிட்டதாக கூறியிருக்கிறார்.

`இப்படி செய்துட்டியே' எனப் பதறித்துடித்த ரேணுகா மற்றும் உறவினர்கள் உடனடியாக ஆற்றுக்கு வந்தனர். அங்கு லாவண்யாவை இளைஞர்கள் மீட்டுப் பத்திரமாக வைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீமதியைக் காணவில்லை. `என் பொண்ணுக்கு என்ன ஆச்சோ எனத் தெரியலையே' என அங்கேயே ரேணுகா கதறியிருக்கிறார். ஸ்ரீமதியை ஆற்றில் வீசினாரா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் பாண்டி கூறியதை வைத்து ஆற்றில் தீயணைப்புத் துறையினர், போலீஸார் மற்றும் இளைஞர்கள் தேடிவருகின்றனர்.

தேடுதல் பணியில்
தேடுதல் பணியில்

குழந்தைகளை ஆற்றில் வீசியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், `பெத்த புள்ளைகள மதுபோதையில் தூக்கி ஆற்றில் வீச உனக்கு எப்படிதான் மனது வந்தது' எனக் கேட்டு பாண்டியைத் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்படவே, போலீஸார் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் ஸ்ரீமதியைத் தேடும் பணி நடந்து வருகிறது. தந்தையின் கொடூர செயல் குறித்துப் பேசிய லாவண்யா, ``என்னையும் பாப்பாவையும் அப்பா ஆத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கேயே ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தோம். அப்ப ஸ்ரீமதி, `அப்பா பயமா இருக்கு. வீட்டுக்குப் போலாம்'னு அழுதாள். அப்பாவோ, `ஆத்துக்குள்ள விழுந்தால் எப்படியிருக்கும்'னு கேட்டார்.

பாண்டி
பாண்டி

உடனே பாப்பா. `போப்பா... நான் விழமாட்டேன்'னு சொன்னா. திடீர்னு என்னைத் தூக்கி ஆத்துக்குள்ள வீசிட்டார். தங்கச்சி பாப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல'' எனக் கூறி அழுதது, அருகிலிருந்தவர்களைக் கலங்க வைத்தது.