Published:Updated:

பாம்பன் : போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்; பதறிய பயணிகள்! - தடுக்கப்பட்ட விபத்து

தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து
தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து

மேலாளர் மீதான கோபத்தில் விபரீத முடிவெடுத்த ஓட்டுநர்.

விடுப்பு தராமல் வேலை பார்க்கச் சொன்னதால், தன் எதிர்ப்பைத் தெரிவிக்க மது குடித்துவிட்டு பேருந்தை இயக்கி, பயணிகளைப் பதறவைத்த ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் பாலுச்சாமி
ஓட்டுநர் பாலுச்சாமி

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக ராமேஸ்வரம் கிளையில் பணியாற்றுகிறார்.

தொடர்ந்து பேருந்து ஓட்டியதால், இன்று விடுப்பு கேட்டிருக்கிறார். அதற்கு மறுத்த ராமேஸ்வரம் கிளை அலுவலர்கள், திருச்சி செல்லும் விரைவுப் பேருந்தை இயக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால், நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் விரக்தி அடைந்த ஓட்டுநர் பாலுச்சாமி விபரீதமாக யோசித்திருக்கிறார்.

இடித்துத் தள்ளப்பட்ட சாலைத் தடுப்புகள்
இடித்துத் தள்ளப்பட்ட சாலைத் தடுப்புகள்

பேருந்தை எடுக்கும் முன் நன்றாக மது குடித்திருக்கிறார். அதன் பிறகு பேருந்தை எடுக்கும்போதே பயணிகள் அலறியிருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் ``நான் யாருன்னு காட்டுறேன்...’’ என்று சொல்லிக்கொண்டே பேருந்தை இஷ்டத்துக்கு ஓட்டியிருக்கிறார்.

சாலையில் வளைத்து வளைத்து பேருந்து சென்றதால் சாலையின் இருபுறமும் சென்ற மக்கள் பதறியிருக்கிறார்கள். தங்கச்சி மடத்தில் காவல்துறை அமைத்திருந்த இரும்பாலான சாலைத் தடுப்புகளை உடைத்து நொறுக்கியபடி பேருந்து சென்றிருக்கிறது. பேருந்தை நிறுத்தச் சொல்லி மக்கள் கூறியும், ஓட்டுநர் வெறிகொண்டபடி ஓட்டியிருக்கிறார். அதற்குள் தகவல், பாம்பன் காவல்துறையினருக்குச் சென்றதால் பாம்பன் பாலத்தில் ஏறுவதற்கு முன் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து
தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து

ஓட்டுநர் பாலுச்சாமி அதிகமாக குடித்திருப்பது தெரிந்தது. `ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என விசாரித்தபோது, ``லீவு தராத டெப்போ அதிகாரிகளைப் பழிவாங்க இப்படிச் செய்தேன். கொஞ்சம் விட்டிருந்தால் பாம்பன் பாலத்தில் மோதியிருப்பேன்..." என்று அதிரவைத்திருக்கிறார். தகவல் உடனே கிடைத்ததால், பயணிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். தன் கோபத்தை அதிகாரிகள்மீது சட்டப்படி காட்டாமல், மக்கள்மீது காட்ட விபரீதமாகச் சிந்தித்த ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு