Published:Updated:

`தணிகான்னு சொல்லு.. காஞ்சிபுரமே அலறும்!' -நள்ளிரவில் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரவுடி?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு காயங்களுடன் வந்த இளைஞர் ஒருவர் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் தண்டபாணியிடம் சென்று குளுக்கோஸ் ஏற்றச் சொல்லி தகராறு செய்திருக்கிறார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி என தன்னை அடையாளப்படுத்தி, தனக்கு குளுக்கோஸ் ஏற்றுமாறு மருத்துவர்களிடம் ரகளை செய்யும் ரவுடியின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்று ரவுடிகளின் போதை மிரட்டல்கள் தொடர்வதால் மருத்துவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

போதையில் தகராறு செய்யும் வாலிபர்
போதையில் தகராறு செய்யும் வாலிபர்

காஞ்சிபுரத்தை இன்றளவும் அச்சுறுத்தி வரும் ரவுடியாகப் பார்க்கப்படுகிறார் தணிகா. கொலை, கொலை மிரட்டல் எனப் பல்வேறு குற்ற வழக்குகளில் இவர் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் கால், போதை, துப்பாக்கி, வெடிகுண்டு எனத் தன்னுடைய கூட்டாளிகளோடு தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரைக் காவல்துறையினர் பிடிக்க முடியாமல் திணறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், “நான் தணிகா.. என் பேரைக் கேட்டாலே காஞ்சிபுரம் அலறும்” என ரவுடி ஒருவர் மருத்துவர்களை மிரட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு காயங்களுடன் வந்த இளைஞர் ஒருவர் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் தண்டபாணியிடம் சென்று குளுக்கோஸ் ஏற்றச் சொல்லி தகராறு செய்திருக்கிறார். இதனால் அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். இந்தநிலையில் அங்கிருந்த ஒருவர் அதைக் காணொலியாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ரவுடியின் மிரட்டல்
ரவுடியின் மிரட்டல்

வீடியோவில் இருப்பது என்ன?

போதை வாலிபர் : ``சார் எனக்கு நல்ல ட்ரீட்மென்ட் வேணும்… எடப்பாடிக்கு போன் பண்ணுவேன்…“

மருத்துவர் : ``போன் போடுங்க…”

போதை வாலிபர் : ``என் பேரு தணிகா… நான் 36-வது வட்டச் செயலாளர் நான்… (திடீரென கோபமாகிறார்) எனக்கு எல்லாமே தெரியும்… எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பு…“

வீடியோ எடுப்பவர் : ``டாக்டரை என்னமோ திட்டினீங்களே…”

போதை வாலிபர் : ``அவர் ரொம்ப நல்லவர்…”

வீடியோ எடுப்பவர் : ``வாடா போடான்னு சொன்னீங்களே…”

போதை வாலிபர் : `` அவர் ரொம்ப நல்லவரு…எனக்கு குளுக்கோஸ் ஏத்துறன்னு சொல்லி இருக்காரு…”(திடீரென கோபமாகிறார்.) ``நான் தணிகா என்னைப் பார்த்தா காஞ்சிபுரமே அலறும்… “ (மனைவி அவரை தடுக்கிறார்)

``நாம போடுற பிச்சைக் காசுலதான் ஹாஸ்பிட்டலே நடக்குது. குளுக்கோஸ் இல்லாம நான் வரமாட்டேன்… அங்கே கேமரா ஓடிக்கிட்டு இருக்கு… எத்தனை கேமரா ஓடுனாலும் சரி… ஆணிய கூட புடுங்க முடியாது… (தடுக்க முயன்ற மனைவியைக் கண்டபடி திட்டுகிறார்)

சிறிது நேரம் கழித்து, `ரொம்ப கேரா இருக்கு' எனக் கூறிவிட்டு அவர் படுத்துவிட்டார்.

`குண்டர் சட்டத்தில் ஸ்ரீதர் ஆதரவாளர்கள்; தலைமறைவில் தணிகா டீம்!'- கதிகலங்கும் காஞ்சி

ரவுடியின் மிரட்டல் குறித்துப் பேசும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களோ, `` சிலர் மதுகுடித்துவிட்டு ரவுடிகள் எனச் சொல்லி எங்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அரசு தலையிட்டு எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

காஞ்சிபுரம் போதை வாலிபர்
காஞ்சிபுரம் போதை வாலிபர்

அந்தப் போதை ஆசாமி யார் என்பது குறித்து காஞ்சிபுரம் வட்டாரத்தில் விசாரித்தோம். ”காஞ்சிபுரத்தில் 36-வது வட்டச் செயலாளராக தி.மு.க-வின் இன்பசேகர் என்பவர்தான் இருக்கிறார். போதை ஆசாமிக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கொஞ்சநாள் தி.மு.க எனச் சொல்வார். கொஞ்சநாள் அ.தி.மு.க எனச் சொல்வார். எப்போதும் போதையிலேயே திரிவார்.

அதுபோல் இவர் பெயர் தணிகா என்பதால் காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி தணிகா என்பவரின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, ‘நான் தான் தணிகா…’ என வடிவேலு பாணியில் எல்லோரையும் மிரட்டுவார். கட்டிங் செலவுக்குக் காசு கொடுத்தால் சைலன்டாக டாஸ்மாக் கடைக்கு ஓடிவிடுவார்” எனச் சொல்லி சிரிக்கிறார்கள்.

பின் செல்ல