Published:Updated:

`அவரின் லைஃப் ஸ்டைலும் பழகிய விதமும் பிடித்திருந்தது!'- தொழிலதிபரால் ஏமாற்றப்பட்ட ஐரோப்பிய மாணவி

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் தொழிலதிபர் மற்றும் அவரின் மகன் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

புகார் கொடுத்த மாணவி
புகார் கொடுத்த மாணவி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்பிரிவின் கட்டுப்பாட்டில் சென்னை மாநகர காவல் துறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த 22 வயதாகும் மாணவி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான், மேல் படிப்புக்காக துபாய் சென்றேன். அங்கு, சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த தொழிலதிபர் ருமேஸ் அகமதுவைச் சந்தித்தேன். இருவரும் நெருங்கிப் பழகினோம். அப்போது அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார்.

மாணவி
மாணவி

பின்னர் சென்னைக்கு அழைத்து வந்த அவர், நட்சத்திர ஹோட்டலில் என்னைத் தங்க வைத்தார். நான், கர்ப்பம் அடைந்த தகவலை ருமேஸ் அகமதுவிடம் சந்தோஷமாகக் கூறினேன். ஆனால் அவர் `முதலில் திருமணமாகட்டும், அதன்பிறகு குழந்தையைப் பெற்றுக்கொள்வோம்' என்று கூறியதோடு கர்ப்பத்தைக் கலைக்கும்படி கூறினார். அதை நம்பி கர்ப்பத்தைக் கலைத்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் பல மாநிலங்களுக்குச் சென்றோம். அப்போது 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தேன். இந்தத் தகவல் ருமேஸ் அகமதுவுக்குத் தெரிந்ததும் அவர் கர்ப்பத்தைக் கலைக்கும்படி கட்டாயப்படுத்தினார்.

இதற்காக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 21.6.2019-ல் அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு இரண்டாவது முறையாக கர்ப்பத்தைக் கலைத்தனர். அதன்பிறகு ருமேஸ் அகமது என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவந்தார். இதுகுறித்து அவரின் தந்தை அப்துல் கரீமுக்கு தகவல் தெரிந்ததும் அவர் என்னிடம் தமிழகத்தைவிட்டு ஓடிவிடு என்று கொலை மிரட்டல் விடுத்தார். அதன்பிறகு ருமேஸ் அகமது என்னை தனியாக தவிக்கவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். எனவே, அவர் மீதும் அவரின் தந்தை மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

காதல்
காதல்

ஜரோப்பாவைச் சேர்ந்த மாணவியிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கூறிய தகவல்களின் அடிப்படையில் ருமேஸ் அகமது மற்றும் அவரின் தந்தை அப்துல் கரீம் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `` துபாயில் ருமேஸ் அகமதுவின் சகோதரி வீடு உள்ளது. அங்கு சென்ற ருமேஸ் அகமது ஒரு பார்ட்டியில்தான் மாணவியைச் சந்தித்துள்ளார். அதன்பிறகுதான் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

மாணவியிடம் தன்னை பெரிய தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ருமேஸ் அகமது, பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அவரின் லைஃப் ஸ்டைல் அவர் பழகிய விதம் ஆகியவற்றைப் பார்த்த மாணவி, ருமேஸ் அகமதுவின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு காவல் நிலையம்
ஆயிரம் விளக்கு காவல் நிலையம்

இந்தக் காதல் ஜோடி வெளிநாட்டிலும் இந்தியாவிலும் பல மாநிலங்களுக்குச் சென்று தங்களின் காதலை வளர்த்தனர். இதனால் இரண்டு முறை மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். மாணவியிடம் சென்டிமென்ட்டாக பேசி முதல் தடவை கர்ப்பத்தை கலைக்க சம்மதம் வாங்கியுள்ளார் அகமது. அடுத்த முறை கர்ப்பத்தை கலைக்கச் சொன்னபோது மாணவியோ, பிடிவாதமாக, திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால்தான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ருமேஸ் அகமதுவின் அப்பா அப்துல் கரீமும் மாணவியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது மாணவிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்துல் கரீம், ஆந்திராவில் இறால் பண்ணை நடத்திவருகிறார். அந்தப் பண்ணையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலைபார்த்துவருகின்றனர். ஆந்திராவில் மட்டுமல்லாமல் சென்னை, கொச்சி, துபாய் என பல இடங்களிலும் அவருக்கு இறால் பண்ணை பிசினஸ் உள்ளது. எம்.பி.ஏ. படித்த ருமேஸ் அகமது, தந்தையின் பிசினஸுக்கு உதவியாக இருந்துவருகிறார். வெளிநாட்டு மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 417, 313, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். அப்துல் கரீம் மற்றும் ருமேஸ் அகமது ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிவில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

இதற்கிடையில், வெளிநாட்டு மாணவிக்கு அடைக்கலம் கொடுத்த போலீஸார், அவருக்கு மருத்துவ பரிசோதனையையும் நடத்த முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டு மாணவியை ஏமாற்றிய புகாரில் தொழிலதிபர் மற்றும் அவரின் மகன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் அப்துல் கரீம் அவரின் மகன் ருமேஸ் அகமது ஆகியோரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்