Published:Updated:

`எழுத்தர் பணி ரூ.3 லட்சம்; கலெக்டர் கையெழுத்துடன் போலி ஆணை!' - இது விருதுநகர் சர்ச்சை

விருதுநகர் மேற்கு காவல் நிலையம்
விருதுநகர் மேற்கு காவல் நிலையம்

விருதுநகரில் ஆட்சியரின் கையெழுத்திட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் எழுத்தர் பணியிடம் பெற்றுத் தருவதாக போலி பணிநியமன ஆணை வழங்கி 10 பேரிடம் மோசடி செய்த இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர், லட்சுமிநகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 29). இவர், தற்போது நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 பேரிடம் இம்மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் எழுத்தர் பணியிட வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.3 லட்சம் பணம் வாங்கியதுடன், ஆட்சியரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, போலி பணிநியமன ஆணையையும் கொடுத்துள்ளார்.

மோசடி செய்த நாகேந்திரன்
மோசடி செய்த நாகேந்திரன்

அப்பணி நியமன ஆணையைக் கொண்டு சென்று, பணியில் சேருவதற்காகச் சென்றபோதுதான் அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல் நிலையப் போலீஸார், நாகேந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிலரிடம் பேசினோம், ``நரிக்குடி யூனியன் ஆபீஸ்ல ஜூனியர் அசிஸன்டென்டா வேலைபார்த்து வரும் நாகேந்திரன், விருதுநகர் மாவட்டத்துல உள்ள யூனியன் ஆபீஸ்களில் 20-க்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கு. அந்தக் காலிப் பணியிடங்கள் இன்டர்வியூ மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கு மாவட்ட நிர்வாகத்துக்குதான் முழு அதிகாரமும் இருக்கு. அதனால, எப்படியும் வேலையை வாங்கிடலாம்னு சொன்னார். நாங்களும் அவர் சொன்னதை நம்பியும், வேலை கிடைக்குமேங்குற ஆசையில 3 லட்சம் பணத்தைக் கொடுத்துட்டோம்.

போலி பணி நியமன ஆணை
போலி பணி நியமன ஆணை

முதலில் ஒரு தொகையை முன்பணமாகக் கேட்டார். அடுத்த ஒரு மாதத்தில் இரண்டாவது தவணை தொகை கேட்டார். அப்பாயின்மென்ட் ஆர்டரைக் காட்டிவிட்டு மீதிப்பணத்தைக் கேட்டார். அப்பாயின்மென்ட் ஆர்டரில் அரசாணை எண், விதிமுறைகள், நடைமுறைகளுடன் முந்தைய ஆட்சியர் சிவஞானம் ஐ.ஏ.எஸ்ஸின் பெயருடன் பச்சைநிற மை கையெழுத்து வரை அனைத்தும் கச்சிதமாக இருந்ததைப் பார்த்து நம்பினோம்.

அதன் பிறகு, சிலநாள்கள் அமைதியாக இருந்தார். பணியிடம் குறித்து தொடர்ந்து கேட்டதும், ஒருநாள் எங்களிடம் காட்டிய பணிநியமன ஆணையைக் கொடுத்தார். ஆனால், ``நான் எப்போ சொல்லுறனோ, அப்போதுதான் உங்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட யூனியன் ஆபீஸுக்குப் போகணும்” எனச் சொல்லி கொடுத்தார். அவர் சொல்லும் வரை காத்திருந்தோம். ஆனால், அவர் சொன்னபாடில்லை.

நாகேந்திரன்
நாகேந்திரன்

அதற்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், ``தேர்தல் வாக்கு பதிவு, வாக்கு எண்ணிக்கை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்பு வரை எதுவும் செய்ய முடியாது பொறுத்திருங்கள்” என்றார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதில் குறிப்பிடப்பட்டிருந்த அலுவலகங்களில் பணிநியமன ஆணையைக் காட்டினோம். அதன்பிறகுதான் இதுபோலி நியமன ஆணை என்பது தெரியவந்தது. வேலை கிடைக்கும்கிற நினைப்புல கடனை வாங்கி, நகையை வித்து பணம் கொடுத்து ஏமாந்துட்டோம்” எனப் புலம்பினார்கள்.

விருதுநகர் மேற்கு காவல் நிலையம்
விருதுநகர் மேற்கு காவல் நிலையம்

இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம், ``இதுவரை 10 பேர் வரை புகார் மனு அளித்துள்ளார்கள். இதேபோல பாதிக்கப்பட்டவர்கள், தகவலறிந்து புகார் அளிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்ட நாகேந்திரனிடம் விசாரணை செய்து வருகிறோம். விசாரணை முடிந்த பிறகே இதில், யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற முழுவிவரம் தெரியும்” என்றனர். விருதுநகரில் ஆட்சியரின் கையெழுத்திட்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய சம்பவம் ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு