Published:Updated:

`பக்தியுடன் துர்கை வழிபாடு... மாயமான கிரீடம், தங்கச் சங்கிலி!’- சிசிடிவி-யால் சிக்கிய திருடன்

தெலங்கானாவில் உள்ள கோயிலில் சாமி கும்பிடுவதுபோல் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருட்டு
திருட்டு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள துர்கை அம்மன் கோயிலில் நேற்று திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிரீடம், தங்கச் சங்கிலி, கைகளில் இருந்த காப்பு உள்ளிட்டவை திருடு போயின. இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகிகள், பூசாரிகள் ஆகியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கோயில் நடை திறந்திருந்தபோது இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் வந்த நபர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகித்தனர்.

திருட்டு
திருட்டு

கோயிலின் கர்ப்பகிரகத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது டிப் டாப் உடை அணிந்த நபர் ஒருவர் மிகவும் பயபக்தியோடு அம்மனை தரிசித்துக்கொண்டிருந்தார். கர்ப்பகிரகத்தின் படிகளை வணங்கியவாறே உள்ள வந்த நபர் அம்மனின் காலைத் தொட்டு வணங்கினார். பின்னர் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி சிறிது நேரம் வழிபாடு செய்தார். அப்படியே அம்மன் அருகில் வந்தவர் என்ன நினைத்தாரோ கிரீடத்தை எடுக்கத் தொடங்கினார்.

சுற்றும் முற்றும் பார்த்தவர் அம்மன் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழற்றி தன் பேன்ட் பாக்கெட்டுகளுக்குள் போட்டுக்கொண்டார். கீரிடத்தை எடுத்து தன் உடலின் மறைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அந்த நபர் உள்ளே வருவதில் இருந்து நகைகளை எடுத்துச் செல்வது வரை அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

போக்கிரி படத்தில், `இவ்ளோ பிளான் பண்ணியும் மண்டைக்கு மேல இருக்க கொண்டைய மறந்து விட்டேனே.. ’ என வடிவேலு கூறுவார். சுற்று முற்றும் பார்த்த அந்த நபர் தலைக்கு மேலிருந்த சிசிடிவி கேமராவைப் பார்க்கவில்லை. அந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.