Published:Updated:

`தடையில்லாச் சான்று வழங்க ரூ.5,000 கொடு!’- விவசாயியிடம் லஞ்சம் கேட்ட உதவிப் பொறியாளர்

உதவிப் பொறியாளர் தென்னரசு
உதவிப் பொறியாளர் தென்னரசு

`எனக்கு ரூ.5,000 லஞ்சம் கொடுக்க வேண்டும். எனக்குக் கப்பம் கட்டினால்தான் தடையில்லாச் சான்று கொடுக்க முடியும்’ என்று தென்னரசு, பிரபாகரனிடம் கறாராகக் கூறியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடிப் பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கல்லணைக் கால்வாய் கோட்ட அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு தென்னரசு என்பவர் கல்லணைக் கால்வாய் கோட்ட உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற விவசாயி, தனது கிராமத்தில் போர்வெல் அமைக்க, தடையில்லாச் சான்று கேட்டு தென்னரசுவை நாடியிருக்கிறார்.

கல்லணைக் கால்வாய் கோட்ட அலுவலகம்
கல்லணைக் கால்வாய் கோட்ட அலுவலகம்

அப்போது, `எனக்கு ரூ.5,000 லஞ்சம் கொடுக்க வேண்டும். எனக்குக் கப்பம் கட்டினால்தான் தடையில்லாச் சான்று கொடுக்க முடியும்’ என்று தென்னரசு, பிரபாகரனிடம் கறாராகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, ரூ.5,000 கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிரபாகரன், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இது பற்றிப் புகார் செய்தார்.

ராணிப்பேட்டை: `ஏழை விவசாயியிடம் லஞ்சம் கேட்டு கறார்!’ -மின்வாரிய அதிகாரி கைது

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய நோட்டுகளை பிரபாகரனிடம் கொடுத்தனுப்பினர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொண்ட பிரபாகரன், ரூ.5,000 லஞ்சத்தை தென்னரசுவிடம் கொடுத்தார். வாங்கிய சில நிமிடங்களுக்குள் அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பீட்டர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் குழு, அதிரடி சோதனை நடத்தினர்.

தென்னரசு
தென்னரசு

அதில், விவசாயியிடம் லஞ்சம் பெற்ற தென்னரசுவைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இதுபோல அவர் வேறு ஏதேனும் லஞ்சம் பெற்றிருக்கிறாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதோடு, உதவிப் பொறியாளர் அலுவலத்திலும் தொடர் சோதனை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு