Election bannerElection banner
Published:Updated:

`சென்னை வழக்கறிஞர் கொலை!’ - வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்த ரௌடி கும்பல்

வழக்கறிஞர் ராஜேஷ்
வழக்கறிஞர் ராஜேஷ்

சென்னையில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய எட்டுப் பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் (38). இவருடைய மனைவி ரம்யா, `மக்கள் ஆளும் அரசியல் கட்சி’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்திவருகிறார். இந்த கட்சியின் ஆலோசகராகவும் ராஜேஷ் இருந்துவந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி பி.வி.காலனியில் கால்பந்தாட்டப் போட்டியை நடத்திவிட்டு ராஜேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சரணடைந்த ரௌடி கும்பல்
சரணடைந்த ரௌடி கும்பல்

வில்லிவாக்கம் எம்.டி.ஹெச் சாலையிலுள்ள மோகன் ரெட்டி மருத்துவமனை அருகே சென்றபோது, தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிந்தபடி திடீரென சுற்றிவளைத்த எட்டுப் பேர் கும்பல் ராஜேஷைக் கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வில்லிவாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வழக்கறிஞர் ஒருவரின் கொலையிலும் ராஜேஷ்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகள் வெட்டிக் கொலை! - வேலூரை அதிரவைத்த கொடூரம்

அதைத் தொடர்ந்து, சில பஞ்சாயத்துகளிலும் தலையிட்டிருந்ததால் அவருக்கு எதிரிகளும் அதிமாகினர். இதனால், லைசென்ஸ் பெற்று கைத்துப்பாக்கியையும் வைத்திருந்தார் என்று சுட்டிக்காட்டும் போலீஸார், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைவைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்தச் சூழலில், வழக்கறிஞர் ராஜேஷ் கொலையில் தொடர்புடைய ரௌடி கும்பலைச் சேர்ந்த எட்டுப் பேர், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

சரணடைந்த ரௌடி கும்பல்
சரணடைந்த ரௌடி கும்பல்

அவர்கள் சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த முருகேசன், அருண், ருக்கேஷ்வரன், சஞ்சய், கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீநாத், திருநெல்வேலியைச் சேர்ந்த வைரமணி, திருவள்ளூரைச் சேர்ந்த கிஷோர்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த எட்டுப் பேர் தரப்பில் சுந்தரமூர்த்தி என்ற வழக்கறிஞர் ஆஜரானார். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் ராஜேஷைக் கொன்றது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, எட்டு பேரையும் வரும் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில்வைக்க நீதிபதி காளி முத்துவேல் உத்தரவிட்டார். கொரோனா பரிசோதனைக்கு பின்னர் எட்டுப் பேரும் வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு