சென்னை: சித்த வைத்தியரின் மனைவி கொலை - சீடனாக அறிமுகமானவரால் நேர்ந்த விபரீதம்!

`எனக்குப் பங்கு கொடுக்காத நீ உயிரோடு இருக்கக் கூடாது' என்று கூறிய சித்த வைத்தியரின் மனைவியைக் கொலை செய்தவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, புதுநல்லூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பூங்கோதை. இவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது.. ``நான் மேற்கண்ட முகவரியில் அம்மா, மகள் ஆகியோருடன் வசித்துவருகிறேன். சுமார் 14 ஆண்டுகளாக ஃபேன்ஸி கடை நடத்தி வியாபாரம் செய்துவருகிறேன். அதில் கிடைத்த வருமானத்தில் சேர்த்துவைத்த பணத்தில் எனக்கு அறிமுகமான நந்தம்பாக்கம் காந்தி தெரு, பெரியார் நகரில் வசித்துவந்த மலர் (70) என்பவருக்குச் சொந்த வீட்டை 23,70,000 ரூபாய்க்கு பேசி ரூ.20,50,000 ரூபாயைக் கொடுத்தேன். மீதிப் பணம் 3,20,000 ரூபாயைப் பின்னர் கொடுப்பதாகக் கூறி, அந்த வீட்டை 30.11.2020-ல் எனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டேன்.
அந்த வீட்டில் மூதாட்டி மலர் தனியாக இருந்ததால், நான் அடிக்கடி அங்கு சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவேன். அப்போது மலர், தன்னுடைய கணவர் அகத்திலகம் என்பவர் உயிரோடு இருக்கும்போது அவருடன் இருந்த ரஜினி என்கிற நவரத்தினமணி என்பவர், வீடு விற்ற பணத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதாகவும், இல்லையெனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் என்னிடம் கூறினார். நான் மலரிடம் வீட்டைச் சரிசெய்து நாங்கள் இங்கு வந்தவுடன் உன்னைப் பார்த்துக்கொள்கிறோம் என்று ஆறுதல் கூறினேன்.
கடந்த இரண்டு நாள்களாக, நான் ஆள்வைத்து, வீட்டைச் சுத்தம் செய்து, பெயின்ட் அடிக்கும் வேலைகளைச் செய்தேன். 7.3.2021-ல் வேலை முடிந்து ஆட்கள் சென்றுவிட்டார்கள். நான் மலரிடம் பேசிக்கொண்டிருந்ததேன். அப்போது மலர், வீட்டின் மின்சார லைட் வெளிச்சத்தில் பிளாஸ்டிக் சேரில் உட்காந்திருந்தார். நான் தரையில் அமர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இரவு 7:45 மணியளவில் வீட்டுக்குள் வந்த ரஜினி என்கிற நவரத்தினமணி, மலரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசினார். பிறகு, `வீட்டை விற்ற பணத்தில் எனக்குப் பங்கு கொடுக்காத நீ உயிரோடு இருக்கக் கூடாது’ என்று கத்தினார். நான் பயந்துபோய் வெளியே தெருவுக்கு வந்துவிட்டேன்.

அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குடியிருந்த சிலர் அங்கு வந்தனர். சற்று நேரத்தில் ரஜினி, `இதோட சாவுடி’ என்று கத்திக்கொண்டே வெளியே வந்து ஓடினார். நானும், அங்கு கூடியிருந்த சிலரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மலரின் இடது பக்க கன்னம் நசுங்கிய நிலையில் கீழே ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அருகில் மாவு அரைக்கும், அரவைக் கல் ரத்த கறையுடன் இருந்தது. மலரைக் கொலை செய்த ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பட்டிருந்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொலை வழக்கு பதிந்து ரஜினியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். ரஜினியிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து குன்றத்தூர் போலீஸார் கூறுகையில்,``கொலை செய்யப்பட்ட மலரின் கணவர் அகத்திலகம், நந்தம்பாக்கம் பகுதியில் சித்த வைத்தியம் மூலம் தெரிந்தவர்களுக்கு வைத்தியம் பார்த்துவந்திருக்கிறார். அப்போதுதான் அகத்திலகத்துக்கு ரஜினி அறிமுகமாகியிருக்கிறார்.

பின்னர் அகத்திலகத்துக்கு சீடராக மாறிய ரஜினி, அவருடன் தங்கி சித்த வைத்தியமும் பார்த்திருக்கிறார். இந்தச் சமயத்தில் அகத்திலகம் இறந்துவிட்டார். அதன் பிறகு அகத்திலகத்தின் மனைவி அந்த வீட்டை விற்றிருக்கிறார். அதனால் மலருக்கும் ரஜினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மலரை ரஜினி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ரஜினியைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.
ரஜினியிடம் போலீஸார் விசாரித்தபோது, `என்னுடைய குரு அகத்திலகம் குடியிடிருந்த வீடு எனக்கு கோயில். அகத்திலகம், தியானம் செய்த அறை இடிக்கப்பட்டதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதைத்தான் தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டேன். ஆத்திரத்தில் அகத்திலகத்தின் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
மூதாட்டியின் கொலைக்கு சித்த வைத்திய கணவரின் வீடு காரணமாக அமைந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.