Published:Updated:

செங்கல்பட்டு: `என் மகளுடன் பழகாதே..!' - கண்டித்த தந்தை; கொலையில் முடிந்த ஒருதலைக் காதல்

கொலை
கொலை ( Representational Image )

செங்கல்பட்டு பகுதியில், மகளை ஒருதலையாகக் காதலித்த இளைஞரை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், இருங்குன்றப்பள்ளியை சேர்ந்தவர் தணிகைமணி ( 43). கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தணிகைமணியின் மகளுக்கும், அதே பகுதியில் இறைச்சிக் கடையில் வேலை பார்த்துவந்த வடபாதி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசனுக்கும் (30) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் தணிகைமணிக்குத் தெரிந்ததும், அவர் மகளைக் கண்டித்திருக்கிறார். பிறகு சிலம்பரசனைச் சந்தித்த தணிகைமணி, `நீ என் மகளுடன் பழகக் கூடாது' என்று எச்சரித்திருக்கிறார். அப்போது சிலம்பரசனுக்கும் தணிகைமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

காதல்
காதல்
representational image

அதன்பிறகும் தணிகைமணியின் மகளுடன் சிலம்பரசன் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தணிகைமணிக்கும் சிலம்பரசனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிலம்பரசன் மற்றும் அவரின் நண்பர்கள் என ஆறு பேர் இறைச்சி வெட்டும் கத்தியால் தணிகைமணியைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த தணிகைமணியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தணிகைமணி உயிரிழந்தார்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் விசாரித்தனர். பிறகு கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் சிலம்பரசன் உட்பட ஆறு பேரைத் தேடிவந்தனர். இந்தநிலையில் தணிகைமணியின் கொலைக்கு நீதிகேட்டு, இருங்குன்றப்பள்ளிப் பகுதி மக்கள் செங்கல்பட்டு எஸ்.பி அலுவலகத்தின் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகளைக் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர்.

சிலம்பரசன்
சிலம்பரசன்
சென்னை: `செல்போனுக்கு வந்த முகம் சுளிக்கவைக்கும் வீடியோக்கள்!’ - இளைஞரைச் சிக்கவைத்த தாய், மகள்

இதையடுத்து செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி கந்தன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டான்லி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சிலம்பரசன் உட்பட அவரின் நண்பர்களைத் தேடிவந்தனர். மதுராந்தகம், பவுஞ்சூர் பகுதியிலுள்ள சுடுகாட்டில் சிலம்பரசன், விஜயகுமார், அக்பர்அலி ஆகியோர் பதுங்கியிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸார் கூறுகையில், ``இறைச்சிக் கடை நடத்திவருபவர் விஜயகுமார். இவரின் கடையில் சிலம்பரசன் வேலை பார்த்து வந்துள்ளார். தணிகைமணியின் மகளை சிலம்பரசன் ஒருதலையாகக் காதலித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அதில் ஏற்பட்ட தகராறில் தணிகைமணியை சிலம்பரசன் தலைமையிலான கும்பல் கொலை செய்துள்ளது" என்றனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு