Published:Updated:

சென்னை: போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி அதிகாரி - மகனுக்காக நீதிமன்றத்தை நாடிய மூதாட்டி

போக்சோ வழக்கு

போக்சோ வழக்கில் கைதான மகனை மீட்க அவரின் அம்மா, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் தன்னுடைய மகன் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் பதிவான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை: போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி அதிகாரி - மகனுக்காக நீதிமன்றத்தை நாடிய மூதாட்டி

போக்சோ வழக்கில் கைதான மகனை மீட்க அவரின் அம்மா, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் தன்னுடைய மகன் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் பதிவான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

Published:Updated:
போக்சோ வழக்கு

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், பகவதி அம்மன் கோயில், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள் என்கிற ரத்தினா (76). இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை வழக்கறிஞர் சார்லஸ்அலெக்ஸாண்டர் என்பவர் மூலம் தாக்கல் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் (ரத்தினா) கடந்த 28 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறேன். கணபதி தியேட்டர் ரோடு பகுதியில் உள்ள கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை மெடிக்கல் செலவு உள்ளிட்ட எனது தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய மூத்த மகன் கோபிநாத் இறந்துவிட்டார். அவனுக்கு இரண்டு மகள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் என்னுடைய மூத்த மகன் குடும்பத்துக்கும் எனக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது. அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 ஐகோர்ட்
ஐகோர்ட்

என்னை எனது இரண்டாவது மகன் சூரியமூர்த்தி என்பவர் கவனித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 19.1.2022-ம் தேதி வீட்டில் இருந்த சூரியமூர்த்தியை விசாரணைக்காக ஊட்டி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி என்பவர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, என்னுடைய மூத்த மகனின் மகளான என்னுடைய பேத்தி, தனக்கு பாலியல் தொல்லையை சூரியமூர்த்தி கொடுத்ததாக புகாரளித்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூறியிருக்கிறார். அந்தப் புகாரின்பேரில் சூரியமூர்த்தி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 38 நாள்களாக சூரியமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியிலிருக்கிறார்.

என்னுடைய இரண்டாவது மகன் சூரியமூர்த்தி மீது கொடுக்கப்பட்டது பொய் புகார். மேலும் போக்சோ சட்ட விதிமுறைகள் படி முறையாக விசாரிக்காமல் அவனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நானும், என்னுடைய இரண்டாவது மகன் சூரியமூர்த்தியும், புகார் கொடுத்தவர்களோடு தொடர்பில் இல்லாமல் இருந்து வருகிறோம். பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் புகாரை என்னுடைய மூத்த மகனின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ரத்தினம்மாள்
ரத்தினம்மாள்

என்னுடைய இரண்டாவது மகன் சூரியமூர்த்தியை சிறைக்கு அனுப்பிவிட்டால் சொத்துக்களை அபகரித்து விடலாம் என மூத்த மகனின் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதன்பின்னணியில் பெண் வழக்கறிஞர் ஒருவரும் உள்ளார். மேலும் என்னுடைய சொத்தை அபகரித்திருக்கும் மூத்த மகனின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நான் பலதடவை புகார் கொடுத்தும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியிருக்கும் போக்சோ வழக்குகள் குறித்து விசாரணை நடத்த தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரத்தினம்மாள் தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருக்கும் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சார்லஸ்அலெக்ஸாண்டர் பேசினோம். ``போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில், போக்சோ வழக்குகளில் யாரும் அவசரம் காட்ட வேண்டாம். உயரதிகாரிகளின் அனுமதியோடு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சூரியமூர்த்தி என்பவர் மீது பதிவாகியிருக்கும் போக்சோ வழக்கில் போலீஸார் அவசர அவசரமாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

சார்லஸ்
சார்லஸ்

புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் எந்தவித பாலியல் தொல்லையும் நடக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சிறுமியிடம் விசாரித்தபோது அவரும் பாலியல் தொல்லை தனக்கு நடந்ததாக சொல்லவில்லை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை இந்த வழக்கு விசாரணையின்போது சமர்பிப்போம். சூரியமூர்த்தி பதிவாகியிருப்பதைப் போல நீலகிரி மாவட்டத்தில் சில போக்சோ வழக்குகளில் போலீஸார் சட்டப்படி விசாரணை நடத்தவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால்தான் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறோம். அந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது" என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெற இன்ஸ்பெக்டர் சரஸ்வதிக்கு பல தடவை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்குப் பின் வெளியிட தயாராக இருக்கிறோம்.!