Published:Updated:

தெலங்கானா: வயதான பெற்றோரை பாரமாகக் கருதிய கணவன், மனைவி! - பட்டினி போட்டுக் கொன்ற கொடூரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வயதான பெற்றோரை பட்டினி போட்டுக் கொன்ற கணவன், மனைவி
வயதான பெற்றோரை பட்டினி போட்டுக் கொன்ற கணவன், மனைவி

தெலங்கானாவில் வயதான பெற்றோரை பாரமாகக் கருதி பட்டினி போட்டுக் கொன்றுவிட்டு, ஊரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அடக்கம் செய்த கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தை அடுத்த தும்மகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திர ரெட்டி (90) மற்றும் அனுசூயம்மா (80). இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். தனக்கு வயதாகி விட்டதால் ராமச்சந்திர ரெட்டியும் அவர் மனைவியும் தங்களுடைய 40 ஏக்கர் நிலத்தை இரண்டு மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு, தங்களை அவர்கள் வீட்டில்வைத்துப் பார்த்துக்கொள்ள மகன்கள் இருவருமே முன்வராததால், ஒரு மாதம் ஒரு மகன் வீட்டிலும், அடுத்த மாதம் மற்றொரு மகனின் வீட்டிலும் மாறி மாறி தங்கி வந்துள்ளனர். சமீபத்தில், இளைய மகன் உயிரிழந்துவிட்டதால் அவரின் மனைவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ராமச்சந்திர ரெட்டி - அனுசூயம்மா
ராமச்சந்திர ரெட்டி - அனுசூயம்மா

இந்தநிலையில், வயதான பெற்றோரை பாரமாகக் கருதிய மூத்த மகன் நாகேஸ்வர ரெட்டியும், அவரின் மனைவி லட்சுமியும் அவர்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி வெளியிலுள்ள கொட்டகை ஒன்றில் தங்க வைத்துள்ளனர். கொளுத்தும் வெயிலில் பிளாஸ்டிக் கொட்டகையில் தங்கவைக்கப்பட்ட தம்பதி வெப்பத்தில் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து மகனிடமும் மருமகளிடமும் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர்களோ 'பரவாயில்லை ஒன்றும் ஆகாது. இங்கேயே இருங்கள்!' என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு, சிறிதளவு உணவை மட்டும் வேண்டா வெறுப்பாக அளித்துவந்திருக்கின்றனர்.

இந்தநிலையில், சொத்துகளைப் பிரித்துக்கொடுத்துவிட்ட பெற்றோர், இனிமேலும் உயிரோடு இருப்பது தங்களுக்குத்தான் சுமை என்று எண்ணிய அவர்ளின் மூத்த மகன் நாகேஸ்வர ரெட்டி வயதான தம்பதியைப் பட்டினி போட்டே கொன்றுவிட மனைவியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார். அதையடுத்து, அடுத்த சில தினங்களுக்கு அந்த வயதான தம்பதிக்கு உணவளிக்காமல், தண்ணீர்கூடக் குடிக்கக் கொடுக்காமல் பரிதவிக்கவிட்டிருக்கின்றனர் இரக்கமற்ற அந்த மனிதப் பிறவிகள். கத்தி உதவி கேட்கக்கூட முடியாத நிலையிலிருந்த நாகேஸ்வர ரெட்டியின் வயதான பெற்றோர், உணவில்லாமல் உடல்நிலை மோசமாகி காக்கை, குருவிகளைப்போல் அந்த கொட்டகையிலேயே மே மாதம் 27-ம் தேதி சுருங்கி விழுந்து உயிரைவிட்டிருக்கின்றனர்.

பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து நாகேஸ்வர ரெட்டியும், அவரின் மனைவியும் ஊர் மக்களிடம் அவர்கள் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகக் கூறிவிட்டு, அவசரகதியில் இருவரது உடலையும் அடக்கம் செய்திருக்கின்றனர். தம்பதியின் மரணத்தில் சந்தேகமடைந்த ஊர் மக்கள் முனகலா காவல் நிலையத்தில் இந்த மரணம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் முனகலா காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சநேயுலு தலைமையில் விசாரணையைத் தொடங்கினார்கள். உயிரிழந்த தம்பதியின் மகன், மருமகள் இருவரையும் போலீஸார் விசாரிக்கையில், அவர்கள் பதற்றத்தில் மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

கைது
கைது

அதனால், சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் தனித் தனியாகத் தீவிரமாக விசாரித்ததில் நாகேஸ்வர ரெட்டியின் மனைவி லட்சுமி பயத்தில் உண்மையைக் கூறிவிட்டார். இதற்கிடையில், அடக்கம் செய்யப்பட்ட கணவன், மனைவியின் உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதில் அவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது.

வயதான கணவன், மனைவியை உணவளிக்காமல் பட்டினி போட்டதில் இறந்துவிட்டதாகத் நாகேஸ்வர ரெட்டியும் அவரது மனைவி லட்சுமியும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, போலீஸார் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சொந்த மகனே பெற்றோரைப் பட்டினி போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு