Published:Updated:

`சார், இந்தப் பணம் உங்களோடதா?'- 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சத்தை இழந்த முதியவர்

எஸ்.மகேஷ்

இரண்டு 100 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசிய மர்மநபர்கள், முதியவரின் கவனத்தைத் திசைதிருப்பி ஒரு லட்சம் ரூபாயைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

100 rupees
100 rupees

சென்னையை அடுத்த புழல், லட்சுமி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தார். நிறுவனத்திலிருந்து கிடைத்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை புழல் பகுதியில் உள்ள வங்கியிலிருந்து நேற்று சீனிவாசன் எடுத்தார். அதை பைக்கின் டேங்க் கவரில் வைத்துவிட்டு பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

Representational image
Representational image

புழல் அந்தோணியார் கோயில் அருகே சீனிவாசன் சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், சார், 100 ரூபாய் நோட்டுக்கள் கீழே கிடப்பதாகக் கூறினார். இதனால், சீனிவாசன் அதை எடுப்பதாகச் சென்றார். இந்தச் சமயத்தில் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிவிட்டு பைக்கில் வந்தவர்கள் தப்பிவிட்டனர்.

சாலையில் கிடந்த இரண்டு 100 ரூபாய் நோட்டுகளை எடுத்த மகிழ்ச்சியில் சீனிவாசன், பைக்கை ஸ்டார்ட் செய்தார். அப்போது பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மாயமாகி இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து புழல் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

cctv
cctv

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சீனிவாசனை வங்கியிலிருந்தே பின்தொடர்ந்து வந்தவர்கள்தான் அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாயைத் திருடியிருக்க வேண்டும். இதனால் வங்கி அமைந்துள்ள பகுதியில் உள் சிசிடிவி கேமரா முதல் அந்தோணியார் கோயில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வரை ஆய்வு செய்துவருகிறோம். சீனிவாசனின் கவனத்தைத் திசைதிருப்பி பணத்தைத் திருடியவர்களின் பைக் நம்பரைக் கொண்டு விசாரணை நடந்துவருகிறது. விரைவில் அவர்களைப் பிடித்து பணத்தை பறிமுதல் செய்துவிடுவோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சீனிவாசனிடம் விசாரித்தபோது அவர் வங்கியிலிருந்து 200 ரூபாய் நோட்டுக்களைத்தான் பெற்றுள்ளார். அப்படியிருக்கும்போது அவர் சாலையில் கிடந்த 100 ரூபாய் நோட்டுக்களுக்கு ஆசைப்பட்டு ஒரு லட்சத்தை இழந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.