ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரை அடுத்த மலாகெடா பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் தன் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது 60 வயதான சுன்னா என்ற சாமியார் அந்தச் சிறுமிக்குப் பணம் கொடுப்பதாகக் கூறி, அருகிலிருந்த கோயிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். உள்ளே சென்றதும் அந்த சிறுமியை சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், அந்த 5 வயது சிறுமி அதற்கு மறுக்கவே, அவளைத் தாக்கத் தொடங்கியிருக்கிறார்.

அதையடுத்து, அந்தச் சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோயிலுக்கு விரைந்தனர். அப்போது, சிறுமியிடம் சாமியார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக சிறுமியை மீட்டனர். மேலும், அந்தச் சாமியாரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அந்தச் சாமியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
